Published : 08 Apr 2018 09:27 AM
Last Updated : 08 Apr 2018 09:27 AM

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொண்டுள்ளன. மே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க விழா நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா, நிர்வாகிகள் அனிருத் சவுத்ரி, அமிதாப் சவுத்ரி மற்றும் பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் குழுவின் தலைவர் விநோத் ராய், உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நடிகர்கள் வருண் தவண், பிரபுதேவா ஆகியோரது நடனம் இடம் பெற்றது. குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற சோகமா, சோகமா பாடலுக்கு பிரபுதேவா ஆடிய நடனமும், வருண் தவணுடன் இணைந்து முகாப்லா பாடலுக்கு ஆடிய நடனமும் அனைவரையும் கவர்ந்தது.

இதன் பின்னர் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விழா மேடைக்கு ஐபிஎல் தொடரின் கோப்பையை கொண்டு வந்து அறிமுகம் செய்தார். தொடர்ந்து நடிகைகள் தமன்னா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரது நடனமும், ஹிருத்திக் ரோஷனின் நடனத்துடனும் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கண்கவர் கலை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இதையடுத்து தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் வெளிநாட்டு வீரர்களாக வாட்சன், பிராவோ, இம்ரன் தகிர், மார்க் வுட் ஆகியோர் இடம் பெற்றனர். அதேவேளையில் மும்பை அணியில் பொல்லார்டு, எவின் லீவிஸ், மெக்லீனகன், முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்தனர். பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது.

எவின் லீவிஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் தீபக் ஷகார் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நிதாமான பேட் செய்த மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்தில், 15 ரன்கள் எடுத்த நிலையில் வாட்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து இஷான் கிஷனுடன், சூர்யகுமார் இணைந்தார். பவர்பிளேவில் 39 ரன்கள் சேர்க்கப்பட்டன. இஷான் கிஷன் 29 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 40 ரன்களும், சூர்யகுமார் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் சேர்த்து முறையே இம்ரன் தகிர், வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஹர்த்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடியது. கிருனல் பாண்டியா 22 பந்துகளில், 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களும், ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில், 22 ரன்களும் விளாச 20 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் வாட்சன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து 166 ரன்கள் இலக்குடன் சென்னை பேட் செய்யத் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x