Published : 13 Apr 2018 07:43 AM
Last Updated : 13 Apr 2018 07:43 AM

பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 76,895 புள்ளிகளுடன் டென்மார்க்கின் விக்டர் அக்செல்சனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் நவீன கால பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்ரீகாந்த். நவீன கால பாட்மிண்டன் தரவரிசை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் இந்தியாவின் பிரகாஷ் படுகோன் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். மேலும் மகளிர் பிரிவில் சாய்னா நெவாலும் ஏற்கெனவே முதலிடம் பிடித்து சிறப்பு சேர்த்திருந்தார்.

தற்போது இந்தியாவின் 3-வது நபராக தரவரிசையில் முதலிடத்தை அலங்கரித்துள்ளார் ஸ்ரீகாந்த். கடந்த ஆண்டு அவர், 4 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்ததில் ஸ்ரீகாந்த் முக்கிய பங்கு வகித்தார். இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் உலக சாம்பியனான மலேசியாவின் லீ சோங் வேயியை வீழ்த்தியிருந்தார். மேலும் ஒற்றையர் பிரிவில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஸ்ரீகாந்த் கூறும்போது, “தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது சிறந்த உணர்வை தருகிறது. ஒவ்வொரு வீரருக்கும் உலகில் சிறந்தவராக திகழ வேண்டும் என்ற கனவு இருக்கும். நான் அதை அடைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

பயிற்சியாளர் கோபி சந்த் மற்றும் இந்திய பாட்மிண்டன் சங்கம், மத்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரும் என்னை நம்பினார்கள், எனது வெற்றியில் இவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். முடிந்த வரை முதலிடத்தை நீண்ட காலத்துக்கு தக்கவைத்துக்கொள்வேன். இந்த சாதனை அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள ஸ்ரீகாந்த்துக்கு இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா வாழ்த்து தெவிரித்துள்ளார். - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x