Published : 12 Apr 2024 02:22 PM
Last Updated : 12 Apr 2024 02:22 PM

“டி20 உலகக் கோப்பை செலக்‌ஷனுக்கு ஆடுறியா, வெல்டன்” - தினேஷ் கார்த்திக்கை கலாய்த்த ரோஹித்

தினேஷ் கார்த்திக் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தன்னிடம் உள்ள அனைத்து விசித்திரமான ஷாட்களை எல்லாம் ஆடி 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிச்கர்களுடன் 53 ரன்களை விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்து ஆர்சிபி அணியின் ஸ்கோரை 196 ரன்களுக்கு உயர்த்தினார். அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக்கை மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நட்பு ரீதியாக கலாய்த்தது சமூக ஊடக தளத்தில் வைரலாகி வருகிறது.

ரோஹித் சர்மா தலைமையில்தான் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி செல்ல உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக்கை உலகக் கோப்பை டி20 செலக்‌ஷனுக்காக ஆடுகிறாயா என்று நட்பு ரீதியாக கலாய்த்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் இந்த கலாய்ப்பு ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்க எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ வைரலானது. அதில், “வெல்டன் டிகே. அவர் உலகக் கோப்பை டி20 தேர்வுக்காக தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார். தினேஷ் கார்த்திக் மனம் மொத்தமும் உலகக் கோப்பை நினைப்புதான்” என்று சிரித்துக் கொண்டே ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக்கிடம் கூற, அங்கிருந்த இஷான் கிஷனும் சிரிக்கிறார். இப்படிப்பேசும் போது கரகோஷம் செய்தபடியேதான் ரோஹித் சர்மா கலாய்த்தார். இதில் மோசமான நோக்கமோ உள்நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை.

அதாவது நான் இந்திய அணியின் கேப்டன் என்னை இம்ப்ரெஸ் செய்ய இப்படிப்பட்ட இன்னிங்ஸை ஆடிக்காட்டுகிறார் போலும் என்ற தொனியும் பாடி லாங்குவேஜும் ரோஹித் சர்மாவின் இந்தப் பேச்சுக் கலாய்ப்பின் உள்ளடக்கமாகவேனும் இருக்கலாம்.

ஆனால் தினேஷ் கார்த்திக் இன்னிங்ஸையும் ஆர்சிபியையும் கதகலங்கடிக்கும் அதிரடி காத்திருக்கிறது என்பது அப்போது தினேஷ் கார்த்திக்கிற்கும் தெரியவில்லை, ஆர்சிபிக்கும் தெரியவில்லை.

ஏனெனில் மும்பை இந்தியன்ஸின் சேசிங் அப்படிப்பட்டது. வடிவேலு சொல்வது போல் ‘என்னா அடி’ என்பதுதான் மும்பையின் நேற்றைய அதிரடி உணர்ச்சி வெளிப்பாடாகும். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69, ரோஹித் சர்மா 24 பந்துகளில் 38, சூரியகுமார் யாதவ் 19 பந்துகளில் 52, ஹர்திக் பாண்டியா வெறும் 6 பந்துகளில் 21.

டாப்ளி, சிராஜ், ஆகாஷ் தீப், கிளென் மேக்ஸ்வெல், விஜய் குமார் வைஷாக், வில் ஜாக்ஸ் என்று ஆர்சிபி பவுலர்கள் அனைவருக்கும் பெரிய அடி. இந்த அடியின் துர்கனவுகளிலிருந்து ஆர்சிபி விடுபட நீண்ட காலம் பிடிக்கும். அதாவது கோலி ஆடினாலும் ஆடாவிட்டாலும் ஆர்சிபி இதுதாண்டா, இவ்வளவுதாண்டா என்பது போல் மும்பை நேற்று அவர்களை சிதைத்து விட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x