Published : 02 Apr 2024 06:23 PM
Last Updated : 02 Apr 2024 06:23 PM

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் உடன் ஏப்.16-ல் பிசிசிஐ ஆலோசனை: பின்னணி என்ன?

அகமதாபாத்: ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கூட்டத்துக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஏப்ரல் 16-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து அணிகளின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்களின் சிஇஓக்கள் குழுவுடன் கூட்டத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின்போது ஐபிஎல் தொடரில் உள்ள சிக்கல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பத்து அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் ஆகியோர் மட்டுமே ஆலோசிக்கும் வகையில் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது ஐபிஎல் தொடர்பான பல கொள்கை முடிவுகளை உரிமையாளர்கள் முன் பிசிசிஐ எடுத்து வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் முதன்மையாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலம் முக்கியமான விவாதப் பொருளாக அமையலாம்.

குறிப்பாக, வீரர்களை ரீடெயின் செய்வதில் உள்ள பிரச்சினைகள் விவாதத்தின் மையப் புள்ளியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் விதிகளை பொறுத்தவரை ஒரு அணி அதிகபட்சமாக நான்கு வீரர்களை ரீடெயின் முறை மூலம் தக்கவைத்து கொள்ள முடியும். ஆனால், இதில் அணி உரிமையாளர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது.

சில உரிமையாளர்கள் ரீடெயின் செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை எட்டாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அணிகளின் பிராண்ட் வேல்யூ, ரசிகர் பட்டாளத்தை உயர்த்துவதற்கு ரீடெயின் செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கை உதவும் என்று அணி உரிமையாளர்களில் சிலர் நம்புகின்றனர். இதன் தொடர்ச்சியே அந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்கு நேரெதிராக சில உரிமையாளர்கள் ரீடெயின் செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். இப்படியாக, ரீடெயின் முறையில் ஒருமித்த கருத்து இல்லாததை அடுத்து அதுகுறித்த விவாதம் முக்கிய அம்சமாக இடம்பெறலாம் எனக் கருதப்படுத்தப்படுகிறது.

இதேபோல், இந்த ஆலோசனை கூட்டத்தில் மெகா ஏலத்தில் ரைட் டு மேட்ச் அல்லது ஆர்டிஎம் கார்டு முறையை அறிமுகப்படுத்துவது பற்றிய விவாதமும் இடம்பெறலாம்.

ரைட் டு மேட்ச் அல்லது ஆர்டிஎம் கார்டு என்பது ஏலத்திற்கு முன் தக்கவைக்க முடியாத ஒரு வீரரை திரும்ப வாங்குவதற்கான வாய்ப்பை அணி உரிமையாளர்களுக்கு வழங்குகிறது. ஒரு குறிப்பிட்ட வீரருக்கான அதிக ஏலத்தொகை தீர்மானிக்கப்பட்ட பிறகு, அந்த வீரரை விடுவித்த பழைய அணி அதே தொகைக்கு ரைட் டு மேட்ச் உரிமை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

உதாரணத்துக்கு தற்போது குஜராத் அணிக்காக ஆடிவரும் உமேஷ் யாதவை தக்கவைக்க வேண்டாம் என அந்த முடிவு செய்து ஏலத்துக்கு விடுவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, உமேஷ் யாதவ் ஏலம் விடுபடுவார். ஏலத்தின் போது ​​அனுமானமாக, உமேஷ் யாதவை டெல்லி கேபிடல்ஸ் ரூ. 2 கோடிக்கு வாங்கினால், குஜராத் அணி இந்த ரைட் டு மேட்ச் உரிமையைப் பயன்படுத்தி அதே ரூ. 2 கோடியை கொடுத்து உமேஷ் யாதவை தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ளலாம்.

இந்த முறை கடைசியாக 2022ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதனை மீண்டும் அறிமுகப்படுத்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இது ஏப்ரல் 16ல் நடைபெறவுள்ள ஆலோசனையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

இதேபோல், ஐபிஎல் மூலம் கிடைக்கும் லாபத்தில் அணிகளுக்கு பிரித்து அளிக்கப்படும் தொகையை அதிகரிப்பது தொடர்பான விவாதங்களும் முக்கியமாக இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x