Published : 02 Apr 2024 08:01 AM
Last Updated : 02 Apr 2024 08:01 AM

வெற்றிப்பாதைக்கு திரும்புமா பெங்களூரு? - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இன்று மோதல்

கோப்புப்படம்

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேவிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இதன் பின்னர் சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இதில் கொல்கத்தா அணி 183 ரன்கள் இலக்கை 19 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. இதனால் பெங்களூரு அணியின் நிகர ரன் ரேட் விகிதம் -0.71 ஆக சரிவடைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள பெங்களூரு அணி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 10 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் 9-வது இடம் வகிக்கிறது. பேட்டிங்கில் விராட் கோலி மட்டுமே தொடர்ச்சியாக போராடி ரன்கள் சேர்க்கக்கூடிய வீரராக திகழ்கிறார்.

டு பிளெஸ்ஸிஸ் ( 3 ஆட்டங்களில் 46 ரன்கள்) பார்மின்றி தவிப்பது அணியின் பலவீனத்தை அதிகரித்துள்ளது. கேமரூன் கிரீனிடமும் (54 ரன்கள்)சீரான செயல் திறன் வெளிப்படவில்லை. ரஜத் பட்டிதார் (21 ரன்கள்), கிளென் மேக்ஸ்வெல் (23ரன்கள்) ஆகியோரது செயல் திறனும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், மஹிபால் லாம்ரோர் போன்ற பின்வரிசை பேட்ஸ்மேன்களை அணி பெரிதும் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் ரஜத் பட்டிதருக்கு பதிலாக சுயாஷ் பிரபுதேசாய் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவர் சுழற்பந்து வீச்சிலும் ஓரளவு கைகொடுக்கக்கூடியவர். பேட்டிங்கை போன்றே பெங்களூரு அணியின் பந்து வீச்சிலும் தடுமாற்றம் காணப்படுகிறது. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமதுசிராஜ் 2 விக்கெட்களை மட்டுமேகைப்பற்றி உள்ளார். அதேவேளையில் ஓவருக்கு 10ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளார்.

ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த அல்சாரி ஜோசப்பும் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வழங்குவது பந்து வீச்சு துறையை மேலும் பலவீனமாக்கி உள்ளது. பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் ரீஸ் டாப்லி அல்லது லாக்கி பெர்குசனை களமிறக்குவது குறித்து பெங்களூரு அணி நிர்வாகம் ஆலோசிக்கக் கூடும்.

சுழற்பந்துவீச்சிலும் வலுவாக செயல்படக்கூடிய வீரர்கள் அணியில் இல்லை. கிளென் மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கரண் சர்மா, மயங்க் தாகர் ஆகியோரது நிலைமையும் அவ்வாறே உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை பெறவேண்டுமானால் பேட்டிங், பந்து வீச்சில் பெங்களூரு அணி எழுச்சி காண வேண்டும்.

மயங்க் யாதவ்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ஆட்டங்களில் ஒரு தோல்வி,ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ அணி அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கே.எல்.ராகுலின் உடற்தகுதியை பெறுவதில் போராடி வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் விளையாடினார்.

இன்றைய ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் முழுமையாக களமிறங்குவது சந்தேகம்தான். இதனால் நிக்கோலஸ் பூரனே அணியை வழிநடத்தக்கூடும். பேட்டிங்கில் குயிண்டன் டி காக், கிருணல் பாண்டியா ஆகியோர் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். இவர்களுடன் தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோரும் மட்டையை சுழற்றினால் பெங்களூரு அணிக்கு சவால் கொடுக்கலாம்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 வயதான வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ்155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி அனைவரையும் ஈர்த்தார். தனது அறிமுக போட்டியிலேயே சீரான வேகத்தால் 3 விக்கெட்களை வீழ்த்திய மயங்க் யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

எனினும் இன்றைய போட்டி குறுகிய பவுண்டரி எல்லைகளை கொண்ட சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் மயங்க் யாதவின் திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x