Published : 24 Mar 2024 03:02 PM
Last Updated : 24 Mar 2024 03:02 PM

''என் இதயத்தை சிரிக்க வைப்பவர்'' - ஷாருக் உடனான ரிங்கு சிங்கின் குடும்பப் புகைப்படம் வைரல்!

கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுடன் ரிங்கு சிங் தனது குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

ஐபிஎல்லின் முந்தைய தொடர் மற்றும் இந்திய டி20 அணியில் தனது அதிரடியான பேட்டிங்கால் தனக்கென ஒரு பெயரையும் இடத்தையும் கவர்ந்த வளரும் நட்சத்திர பேட்டர் மற்றும் புதிய பினிஷரான ரிங்கு சிங் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சனிக்கிழமை ஈடன் கார்டன்ஸில் சப்தமிடும் பெரிய ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னிலையில் கேகேஆர் த்ரில்லரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 4 ரன்களில் வீழ்த்தியது. 51/5 என்று இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முதலில் அதிரடியைக் காட்டி உத்வேகம் அளித்தவர் ரமன் தீப் சிங். இவர் இறங்கியவுடனேயே கமின்ஸ் ஓவரில் பவுண்டரி மற்றும் இடி போன்ற ஹூக் ஷாட்டில் சிக்சரும் விளாசி 35 ரன்களை விரைவாக எடுக்க, அங்கிருந்து இங்கிலாந்தின் பில் சால்ட் (54), ரிங்கு சிங் (23), ரஸல் (64) அதிரடி முறையில் விளாசி கடைசி 6 ஓவர்களில் 89 ரன்கள் என்று ஓவருக்கு 15 ரன்கள் பக்கம் விளாசி 208 ரன்களை சேர்த்தது கேகேஆர்.

ரிங்கு சிங்கின் நேற்றைய ஆட்டத்தின் சிறப்பு என்னவெனில் அவர் இறங்கியவுடனேயே பவுண்டரியை விளாசினாலும் பிறகு ரஸல் இருந்த மூடுக்கு அவருக்கு ஸ்ட்ரைக் கொடுப்பதுதான் சிறந்தது என்று சிங்கிள் எடுத்துக் கொடுத்து மிக அழகாக உறுதுணை இன்னிங்சை ஆடினார். இவரும் தன் பங்குக்கு 3 பவுண்டரிகளை விளாசினார். கடைசி ஓவரில் நடராஜனின் பந்தில் ஆட்டமிழந்தார். நடராஜன் வீசிய அருமையான ஓவராகும் அது.

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியும் 17வது ஓவரில் அப்துல் சமது அவுட் ஆக 145/5 என்று வெற்றி பெற வாய்ப்பில்லா நிலையில் இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 60 ரன்கள் பக்கம் தேவைப்பட்டது. ஹென்ரிச் கிளாசன் சரியான அதிரடி ஆட்ட மூடில் இருந்தார். அவர் அடித்தது எல்லாமே சிக்சர்கள்தான் 8 சிக்சர்களுடன் 29 பந்துகளில் 64 ரன்களை விளாசி கேகேஆர் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் வயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டார். ஷாபாஸ் அகமது 16 ரன்களை 5 பந்துகளில் விளாசினார், ஆனால் கடைசி ஒவரில் கிளாசன் ஆட்டமிழக்கவே 4 ரன்களில் கேகே ஆர் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரிங்கு சிங் தன் பங்கைச் செவ்வனே செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக்கானுடன் குடும்ப உறுப்பினர் சகிதம் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்துக்கான வாசகமாக ரிங்கு சிங், “The ones who make my heart smile.” என்று கூறியுள்ளது ரிங்கு சிங் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அடுத்தப் போட்டியில் மார்ச் 29ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியைச் சந்திக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x