Published : 09 Feb 2018 08:06 AM
Last Updated : 09 Feb 2018 08:06 AM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து

உலகக் கோப்பை தொடரில் ரிஸ்ட்ஸ் ஸ்பின்னர்கள் பெரிய காரணிகளாக இருப்பார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 303 ரன்கள் குவித்தது. தனது 34-வது சதத்தை அடித்த கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் விளாசினார். கடினமான இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஒரு முறை ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரது பிடியில் சிக்கியது.

இந்தக் கூட்டணியின் அற்புதமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஜேபி டுமினி 51, கேப்டன் எய்டன் மார்க்ரம் 32 ரன்கள் எடுத்தனர். குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர். இந்த வெற்றியால் 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இருதரப்பு தொடரில் அதிலும் அந்நாட்டு மண்ணில் இந்திய அணி 3 ஆட்டங்களில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்னர் இந்திய அணி அதிகபட்சமாக 2 ஆட்டங்களுக்கு மேல் வெற்றி பெற்றது கிடையாது. தற்போதைய வெற்றியால் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைப்பதற்கான தருணம் உருவாகி உள்ளது. இந்த சாதனையை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி குழுவினர் நிகழ்த்தக்கூடும் என கருதப்படுகிறது.

இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரை விராட் கோலி வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும் உலகக் கோப்பை தொடரில் ரிஸ்ட் ஸ்பின் பெரிய அளவிலான காரணியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விராட் கோலி மேலும் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவில் சாஹலும், குல்தீப் யாதவும் விக்கெட்கள் கைப்பற்றுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் அவர்கள் உள்நாட்டில் தட்டையான ஆடுகளங்களில் பந்து வீசி உள்ளார்கள். டி 20 ஆட்டங்களில் மட்டும் இவர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள் என சிலர் நினைக்கலாம். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் நிலைமை வேறு, கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் வழக்கம் போல விக்கெட்கள் கைப்பற்றுவது சிறப்பான விஷயம்.

டெஸ்ட் போட்டிகளில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் விளையாடும் எண்ணம் சற்று விலகியே உள்ளது. எனினும் அவர்கள் தங்களை வலுவான நிலையில் உருவாக்கிக் கொண்டுள்ளனர். தென் ஆப்பிரிக்க சூழ்நிலைகளில் அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் திருப்புமுனைகள் இதற்கு முன்னர் நாங்கள் அறிந்திராதவையாக உள்ளது. எதிரணியை சுற்றி ஒட்டுமொத்தமாக ஒரு வலைப்பின்னலை இவர்கள் உருவாக்குவதை பார்க்க சிறப்பம்சமாக உள்ளது. இதில் இருந்து எதிரணி வெளியே செல்ல வழி இருக்காது, இது நம்பமுடியாதது. சுழல் கூட்டணி 8 விக்கெட்களை கைப்பற்றியது அற்புதமான விஷயம்.

தங்களது பந்து வீச்சில் ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும் துணிச்சலுடன் செயல்படுகிறார்கள். இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பாராட்டுகள் அவர்களையே சேரும். எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் தைரியமாக இருக்கும் அவர்கள், தாங்கள் விரும்பும் வகையிலான பீல்டிங்கையும் சிறப்பாக அமைக்கின்றனர். எளிதாக ரன்கள் சேர்க்கக்கூடிய வகையிலான பந்துகளை வீசி, பேட்ஸ்மேன்களை அபாயகரமான ஷாட் மேற்கொள்ள வைக்கின்றனர். அவர்களுக்கு தலை வணங்குகிறேன். ஆனால் மற்ற விவாதங்கள் விலகியே உள்ளன. எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பது தெரியாது, ஆனால் இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

ஓவருக்கு 6 ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அவர்கள் 3 முதல் 4 விக்கெட்களை கைப்பற்றுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த இரு ஆட்டங்களிலும் இவர்கள் தான் அதிக விக்கெட்கள் வீழ்த்தினார்கள். அந்த ஆட்டங்களில் இரு அணிகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இவர்கள் சுழல்தான். விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் பேட்ஸ்மேனுக்கு அசவுகரியமான இடத்தில் பந்துகளை வீச வேண்டும். சாஹலும், குல்தீப்பும் இந்த திசைகளில் சரியான நீளத்தில் பந்துகளை வீசி தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஓவரையும் வீசும் போது பேட்ஸ்மேன்கள் குறித்து 2 முதல் 3 வினாக்களை கேட்கின்றனர், இது சிறப்பான விஷயம். இதை இதற்கு முன்னர் நான் கண்டதில்லை. ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்கள் கைப்பற்ற முடியும் என அவர்கள், தங்களது திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது அணியும் நம்பிக்கை வைத்துள்ளது. அடுத்த ஆட்டத்தில் இவர்களது ஓவர்களில் 70 ரன்கள் அடிக்கப்படலாம். ஆனால் அது ஒரு பிரச்சினை இல்லை, ஏனெனில் அவர்கள் தாக்குதல் பந்து வீச்சை தொடுத்தால் எப்படியும் 2 முதல் 3 விக்கெட்களை ஒவ்வொரு ஆட்டத்திலும் வீழ்த்திவிடுவார்கள். உலகக் கோப்பை தொடரை நாங்கள் சொந்த நாட்டுக்கு வெளியே எதிர்கொள்கிறோம். இதனால் இவர்கள் மிகப்பெரிய காரணியாக இருப்பார்கள் என கருதுகிறேன். இவ்வாறு விராட் கோலி கூறினார்.

சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி இந்தத் தொடரில் 21 விக்கெட்களை வேட்டையாடி உள்ளது. இந்த சுழல் கூட்டணியை சமாளிப்பதற்கான வழிகளை தென் ஆப்பிரிக்க அணி கண்டுபிடிக்க முடியாமல் தொடர்ந்து சரண் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x