Published : 23 Feb 2024 01:43 PM
Last Updated : 23 Feb 2024 01:43 PM

பென் ஸ்டோக்ஸ் பரிதாபம் - கணுக்காலுக்குக் கீழ் சென்ற பந்துக்கு கொண்டாட்டம் அவசியமா?

ராஞ்சி: ராஞ்சியில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முதல் செஷனில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

பெங்கால் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நல்ல வேகம் மற்றும் ஸ்விங்குடன் வீசி அறிமுக டெஸ்ட்டிலேயே முதல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவின் உருண்டு வந்த பந்தில் மட்டைக்குக் கீழ் பந்து பாம்பு போல் செல்ல பவுல்டு ஆனது. இந்தப் பிட்ச் போகப்போக எப்படி நடந்து கொள்ளும் என்பதை அறிவுறுத்தும் விதமாக இந்த விக்கெட் அமைந்தது.

டாஸ் வென்று பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜாக் கிராவ்லி அறிமுக பவுலர் ஆகாஷ் தீப்பின் அட்டகாசமான இன்ஸ்விங்கரில் மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே பந்து புகுந்து பவுல்டு ஆனார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நோ-பால் ஆனது. ஆனால் பென் டக்கெட்டுக்கு அவர் வீசிய பந்து அறிமுக பவுலர் வீசும் பந்து அல்ல என்பது போல் அத்தனைத் துல்லியம். ஆஃப் ஸ்டம்ப்புக்கு நேராக ஒரு கோணத்தில் வந்த பந்து சற்றே நேராக பென் டக்கெட் மட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

அட்டகாசமான முதல் விக்கெட். அதுவும் பெரிய விக்கெட். அதே ஓவரிலேயே 4வது பந்தில் ஆலி போப் பந்தை மேலேறி வந்து ஆடி கால்காப்பில் வாங்கினார். நடுவர் லெக் பை என்றே கூறி விட்டார். ஆனால் ரோஹித் சர்மா ரிவியூ செய்தார். வழக்கம் போல் ஹாக்-ஐ பந்து லெக் ஸ்டம்ப்பிற்கு மேல் அடிக்குமாறு காட்டியது. ஆனால் ஆலி போப் கிரீசிலிருந்து 2-3 அடி இறங்கி வந்து ஆடினார். அது என்ன கணக்கு என்று தெரியவில்லை. அது எப்படி அத்தனை தூரத்திலிருந்து பந்து ஸ்டம்பை நோக்கித்தான் செல்லும் என்று கூற முடியுமோ தெரியவில்லை. எது எப்படியோ இது இங்குள்ள ஹாக்-ஐ ஸ்டோக்ஸ் கூறுவது போல் என்ன வேண்டுமானாலும் காட்டலாம்.

ஜால் கிராவ்லி நோ-பால் பவுல்டுக்குப் பிறகு அருமையாக ஆடினார். 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 42 பந்துகளில் 42 ரன்கள் என்று நன்றாக ஆடினார். ஆனால் ஆகாஷ் தீப் மீண்டும் பயங்கரமாக ஸ்விங்கர் வீச பந்து ஆஃப் ஸ்டம்ப் நோக்கி வந்து கிராவ்லி மட்டையை பீட் செய்து ஸ்டம்பைப் பதம் பார்த்தது. அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட். அதுவும் முதல் 3 விக்கெட் ஆகாஷ் தீப்பிற்கு.

ஜானி பேர்ஸ்டோ 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்களை அதிரடியாக எடுத்து அஸ்வினின் திரும்பாத நேராக வந்த பந்தை ஸ்வீப் ஆடப்போய் கால்காப்பில் வாங்கி எல்.பி ஆகி வெளியேறினார். இதன்மூலம் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்கள் 100 விக்கெட் என்ற டபுள் சாதனையை நிகழ்த்திய 4வது வீரர் ஆனார்.

கடைசியாக உணவு இடைவேளைக்கு முன்பாக பென் ஸ்டோக்ஸிற்கு ஜடேஜா வீசிய பந்தை உலகில் எந்த பேட்டரும் ஆட முடியாது. அண்டர் கிரவுண்டிலிருந்துதான் அந்தப் பந்தை ஆட முடியும். மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆன பந்து சர சரவென பாம்பை விடவும் வேகமாக தரையோடு தரையாக சீறி வந்து கால்காப்பைத் தாக்கியது. பென் ஸ்டோக்ஸ் நடுவர் அவுட் கொடுக்கும் முன்னரே நக்கலாக சிரித்தபடி பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

நிச்சயம் ஒரு நல்ல கேப்டன், ஒரு நல்ல ஜெண்டில்மேன் நடுவர் என்றால், நிச்சயம் பென் ஸ்டோக்ஸை ரீ-கால் செய்து மீண்டும் ஆடச் செய்திருப்பார்கள். உருண்டு வந்த பந்தானாலும் சட்டப்பூர்வ பந்தே என்பது அநியாயம். உண்மையில் அதை டெட் பால் என்று அழைக்கும் புதிய விதி செய்ய வேண்டும். ஒரு நல்ல கேப்டன், அதாவது ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் உள்ள கேப்டன் நிச்சயம் பென் ஸ்டோக்ஸை ரீகால் செய்திருப்பார். தோனி ஒரு முறை இந்தக் காரணங்களுக்காக அல்லாவிடினும் இயன் பெல்லை பேட் செய்யுமாறு அழைத்தார். கோல்டன் ஜூப்ளி டெஸ்ட் போட்டியில் பாப் டெய்லர் என்ற இங்கிலாந்து விக்கெட் கீப்பரை நடுவர் அவுட் என்று தீர்ப்பளித்தும் கேப்டன் ஜி.ஆர்.விஸ்வநாத் திரும்பி அழைத்து ஆடச் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் ஒருநாள் போட்டி ஒன்றில் ஸ்ரீகாந்தின் மட்டையில் பட்ட பந்திற்கு நடுவர் எல்.பி .தீர்ப்பளிக்க கேப்டன் இம்ரான் ஸ்ரீகாந்த்தை திருப்பி அழைத்து ஆட வைத்ததும் நடந்துள்ளது. கிரிக்கெட்டில் இப்படி சிலவற்றைச் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் இங்கு என்னவென்றால் ஜடேஜா ஏதோ உலக மகா பந்தை வீசி விட்டது போலவும் ஏதோ ஷேன் வார்னின் ‘பால் ஆஃப் த செஞ்சுரி’ கேட்டிங்கை வீழ்த்திய பந்து போல் கணுக்காலுக்குக் கீழ் பாத அளவில் சென்ற பந்தில் விழுந்த விக்கெட்டுக்கு கொண்டாடித் தீர்க்கின்றார். பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆன விதம் இந்தப் பிட்ச் எப்படி இனி நடந்து கொள்ளும் என்பதற்கு ஒரு சான்றாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x