Published : 22 Feb 2024 11:58 PM
Last Updated : 22 Feb 2024 11:58 PM

மாரத்தான் வீரர் கிப்டமின் இறுதிப் பயணம்: கென்ய மக்கள் பிரியாவிடை

நைரோபி: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கென்ய நாட்டு வீரர் கெல்வின் கிப்டம், கடந்த 11-ம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் வெள்ளிக்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் திரளான கென்ய மக்கள் திரண்டு பிரியாவிடை அளித்தனர்.

24 வயதான அவருடன் இந்த கார் விபத்தில் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தார். இந்த சூழலில் அவரது சொந்த கிராமமான செப்சாமோ கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று எல்டோரெட் நகரில் இருந்து செப்சாமோ கிராமத்துக்கு சாலை மார்க்கமாக சுமார் 80 கிலோ மீட்டர் அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது.

அவரது உடலை சுமந்து செல்லும் வாகனத்துக்கு முன்பும், பின்பும் மக்கள் புடைசூழ வாகனம் நகர்கிறது. இதில் சக தடகள வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் அங்கம் வகிக்கின்றனர். அவரது மனைவி, மகன், மகள் மற்றும் தந்தையும் இதில் பங்கேற்றுள்ளனர். தொழில்முறை தடகள வீரராக மாறுவதற்கு முன்பு இந்த கிராமத்தில்தான் கெல்வின் கிப்டம், கால்நடை மேய்ச்சல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ரோட்டர்டாமில் நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் 2 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் பந்தய தூரத்தை அவர் கடந்து சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த அக்டோபரில் சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 34 நொடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்துக்கு வீடு கட்டி தருமாறு கென்ய அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x