Published : 22 Feb 2024 02:27 PM
Last Updated : 22 Feb 2024 02:27 PM

சுழலுக்கு சாதகமான ராஞ்சி ஆடுகளம்: பும்ராவுக்கு ஓய்வு எனில், இந்திய அணி திட்டம் என்ன?

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ராஞ்சி பிட்சை முழுவதும் குழிப்பிட்ச் ஆகப் போடுவதன் சூட்சுமம்தானோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என்றால் அவருக்குப் பதில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் வருவார் என்று நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ராஞ்சி பிட்சைப் பற்றி வரும் தகவல்கள் அது ஒரு குழிப்பிட்ச் என்றே தெரியப்படுத்துகிறது.

ஆலி போப் பிட்சைப் பற்றிக் கூறும்போது "பார்ப்பதற்கு பேட்டிங் பிட்ச் போல் தோன்றினாலும் வலது கை பேட்டரின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்சில் பெரிய பிளவுகள் உள்ளன. இது எப்போது வேண்டுமானாலும் உடையும். அதேபோல் இன்னொரு முனையில் இடது கை பேட்டரின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளிப்பகுதி பந்துகள் பிட்ச் ஆகும் இடத்தில் பிளவுகள் உள்ளன" என்கிறார். ஆகவே ஜடேஜா, குல்தீப், அஸ்வின் ஆகியோரோடு அக்சர் படேலையும் இணைத்துக் கொள்வார்கள் என்றே தெரிகிறது. அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

2016-17 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராஞ்சி பிட்ச் மிகவும் மட்டையாக இருந்தது. பந்துகள் ஒன்றுமே ஆகாமல் மெதுவாக வந்தன. இரு அணிகளும் அதிக ஸ்கோர்களை எடுத்தனர். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 178 ரன்கள் நாட் அவுட், கிளென் மேக்ஸ்வெல் 104 அடிக்க 451 ரன்களை ஆஸ்திரேலியா எடுக்க, பதிலுக்கு இந்திய அணியில் புஜாரா 202 ரன்களைக் குவிக்க, இப்போது மறக்கடிக்கப்பட்ட, பிசிசிஐ-யினால் ஒழுங்காக நடத்தப்படாத விருத்திமான் சஹா 117 ரன்களை எடுத்தார். முரளி விஜய் 82, ராகுல் 67 என்று இந்தியா 603/9 டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 204/6 என்று முடிய ஆட்டம் டிரா ஆனது.

ஆனால் 2019-20ல் தென் ஆப்பிரிக்கா வந்தபோது அவ்வளவு நல்ல பிட்ச் அல்ல. அதாவது டாஸ் வென்றால் ஓரளவுக்கு பேட்டிங் ஆடலாம். இரண்டாவதாக பேட்டிங் ஆடினால் பந்துகளின் நடனத்திற்கு ஏற்ப பேட்டர்களின் நடனம் அமையும் என்று இருந்தது.

இந்தியா முதலில் பேட் செய்தது. ரோஹித் சர்மா 255 பந்துகளில் 212 ரன்களை 28 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் விளாசித் தள்ளினார். ரஹானே 115 ரன்கள், ஜடேஜா 51 ரன்கள் என்று எடுக்க இந்தியா 497 ரன்களைக் குவித்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்குச் சுருண்டது. பின்னர் ஃபாலோ ஆன் ஆடி 133 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், எல்கர், டுபிளெசிஸ், பவுமா போன்றவர்கள் இருந்தும் இன்னிங்ஸ் தோல்வி.

இந்த முறை இங்கிலாந்துக்கும் பந்துகள் திரும்பும், அதாவது ஸ்பின்னர்களை முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே கொண்டு வரும்படியான பிட்ச்தான் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்திய அணி நிர்வாகமும் ஸ்பின் பிட்சை கேட்டதாகத்தான் தெரிகிறது.

ஏனெனில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஓரளவுக்கு இரு அணிகளுக்கும் சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இது போதும் என்று கூறிவிட்டாரோ ரோஹித் சர்மா. இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா என்று இங்கிலாந்து கேட்கும் வண்ணம் பும்ராவை உட்கார வைக்கும் போதே இந்திய அணி நிர்வாகத்தின் நோக்கம் புரிந்து விட்டது.

அல்லது வேகப்பந்து வீச்சாளர் இன்னொருவர் தேவை என்று கருதினால் ரஜத் படிதாரைத் தூக்கி விட்டு அந்த இடத்தில் முகேஷ் குமாரை களமிறக்கலாம். அதான் பேட்டிங்கில் அக்சர் படேல், ஜடேஜா, அஸ்வின் போன்றோர் ஆட முடியுமே. ராகுல் வேறு வந்து விடுகிறார். அதனால் இதற்கு வாய்ப்பில்லை.

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ஜுரெல், ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ் என்றுதான் அணி வரிசை இருக்கும். குல்தீப் யாதவ் வேண்டாம் குழிப்பிட்ச்தானே அக்சர், அஸ்வின், ஜடேஜாவே முடித்து விடுவார்கள் என்று நினைத்தால் ரஜத் படிதாரையும் அணியில் வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x