

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்கள் விளாசிய இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
22 வயதான இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 209 ரன்களும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 214 ரன்களையும் விளாசியிருந்தார். இதன் மூலம்தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்களை விளாசிய 7-வது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்திருந்தார்.
ராஜ்கோட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்த இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 41-வது இடத்தில் இருந்து 34-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர்,ராஜ்கோட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் விளாசியிருந்தார். இதே போட்டியில் 131 ரன்கள் விளாசியிருந்த கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார். 2-வது இன்னிங்ஸில் 91 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில் 3 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார்.
அறிமுக வீரர்களான சர்பராஸ் கான், துருவ் ஜூரெல்ஆகியோரும் தரவரிசை பட்டியலில்நுழைந்துள்ளனர். இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த சர்பராஸ்கான் 75-வது இடத்தையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் 100-வது இடத்திலும் உள்ளனர். சொந்தகாரணங் களுக்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ளாத நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் விளாசிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான பென் டக்கெட் 12 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை அடைந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 893 புள்ளிகளுடன் வலுவாக முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திலும், நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 876 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 7 விக்கெட்கள் வீழ்த்திய ரவீந்திரஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 789 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி 839 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் ஜடேஜா 469 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 330 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.