Published : 17 Feb 2024 01:26 PM
Last Updated : 17 Feb 2024 01:26 PM

முதல் பந்து வீசும் முன்பே இங்கிலாந்து 5/0 என்று துவங்கியது எப்படி?- பின்னணியில் அஸ்வின்

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. நேற்று இந்திய அணி 445 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இறங்கியது. ஆனால் களமிறங்கும் முன்னரே இங்கிலாந்தின் ஸ்கோர் 5 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லை என்று ஸ்கோர் போர்டு காட்டியது, இது எதனால் என்று பலருக்கும் குழப்பமாக இருக்கலாம். இதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது.

ஆடுகளத்தில் பந்துகள் பிட்ச் ஆகும் பகுதியில் பவுலரோ, பேட்டரோ ஓடி வந்து சேதம் விளைவிப்பதாக நடுவர் உணர்ந்தால் அல்லது கண்டால் ஓரிருமுறை எச்சரிக்கை கொடுத்த பிறகு நடுவர்கள் தவறு செய்த அணிக்கு எதிராக எதிரணிக்கு 5 ரன்களை அபராதமாக வழங்கிவிட முடியும். இந்த நடைமுறை கிரிக்கெட் விதிகளில் உண்டு. நேற்று அப்படித்தான் அஸ்வின் பேட்டிங் செய்த போது எச்சரிக்கைகளையும் மீறி பிட்சில் ஓடியதால் 5 ரன்களை இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்துக்கு சாதகமாக நடுவர் வழங்கினார். அதனால் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னரே, அதாவது முதல் பந்தை எதிர்கொள்ளும் முன்னரே இங்கிலாந்து கணக்கில் 5 ரன்கள் ஏறியது.

நேற்றைய ஆட்டத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. முதல் நாள் ஆட்டத்தில் சர்பராஸ் கான் பிட்சில் ஓடியதாக சற்றே உணர்ந்த பிறகு அவர் தன்னுணர்வுடன் பிட்சைத் தவிர்த்து ஓடத் தொடங்கினார். ஏற்கெனவே முதல் நாள் ஆட்டத்தின் போது ஜடேஜா பிட்சில் ஓடியதாக நடுவரால் எச்சரிக்கப்பட்டார். இதெல்லாம் போங்கு ஆட்டமே. பிட்ச் பிளாட்டாக பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கிறது என்று பிட்சில் ஓடி சேதப்படுத்தும் கயமையாகும் இது.

அதாவது பாப்பிங் கிரீஸிலிருந்து 5 அடி அல்லது 1.52 மீ தூரத்திற்கான ஒரு கற்பனையான செவ்வகப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்று விதிமுறை அழைக்கிறது. இந்திய அணி பேட் செய்த போது 102வது ஓவரிலேயே இந்த 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டு விட்டன. காரணம், அஸ்வின் கவர் திசையில் ஒரு பந்தைத் தள்ளி விட்டு பிட்சில் நடுவாந்திரமாக ஓடியதே. டி20 கிரிக்கெட்டில் மன்கடிங் செய்வதற்கு ஆயிரம் நியாயங்களை வழங்கி நியாயப்படுத்திய அனுபவசாலியான அஸ்வின் 500 விக்கெட்டுகளுக்கு அருகில் இருந்த அஸ்வின் இப்படி பிட்சில் ஓடுவது தவறு என்று தெரியாதா?

ஆனால் அஸ்வின் பிற்பாடு பேட்டியில் தன்னுடைய 'மோசமான தன் உடல் இயங்குதிறன்’ என்று காரணம் கூறினார். மேலும் அவர் கூறிய போது, “நடுவர்கள் எச்சரித்தபடியே இருந்தனர். அது தவறு என்று எனக்குத் தெரியும். நான் வேண்டுமென்றே அப்படிச் செய்தேன் என்று ஆங்கிலேய ஊடகங்கள் கருதினால் அது அப்படியல்ல என்று கூறுகிறேன். அதை அப்படித்தான் நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அதில் ஓடியதால் பிட்ச் உடைந்து போகும் என்று நான் கருதவில்லை. அப்படி விறுவிறுவென நான் ஒழுங்கான பாதையில் ஓட முடிந்தவனாக இருந்தால் நான் ஏன் கிரிக்கெட்டிற்கு வருகிறேன் ஒலிம்பிக்கிற்குச் சென்றிருப்பேன்” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

அலிஸ்டர் குக் இது குறித்து கருத்து தெரிவித்த போது, ‘‘ஆம்! அஸ்வின் வேண்டுமென்றேதான் ஓடினார்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஆனால் பிட்சில் ஓடி விட்டு நான் ஓடுவதால் பிட்ச் உடைந்து விடும் என்று கருதவில்லை என்று கூறுவது தெரிந்தே ஓடியிருக்கிறார் என்ற குறிப்பை உணர்த்துவதாக உள்ளதே. பரீட்சையில் காப்பி அடிக்கக் கூடாது என்பதுதான் விதிமுறை. காப்பி அடித்து விட்டு கடைசியில் நான் தான் பெயில் ஆகிவிட்டேனே, காப்பி அடித்தாலும் நான் பாஸ் ஆகி விடுவேன் என்று கருதவில்லை என்று ஒரு மாணவன் கூறினால் ஏற்றுக் கொள்வோமா என்பதுதான் கேள்வி. ஆகவே நோக்கமும், செயலும்தான் பிரச்சனையே தவிர அதன் விளைவுகள் ஏற்படவில்லை என்பதற்காக நோக்கமும் செயலும் நன்று என்று கூற முடியுமா என்பதும் கேள்வியே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x