Published : 16 Feb 2024 10:32 PM
Last Updated : 16 Feb 2024 10:32 PM

‘இதை அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன்’ - 500 விக்கெட் சாதனை குறித்து அஸ்வின்

அஸ்வின் | கோப்புப்படம்

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், தமிழருமான அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில், இதை தனது அப்பாவுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை அஸ்வின் எட்டினார். குறைந்த டெஸ்ட் போட்டிகள் (98) மற்றும் குறைந்த பந்துகளை (25,714) வீசி 500 விக்கெட்களை கைப்பற்றி வீரர்களில் இரண்டாவது இடத்தில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த போது அவர் தெரிவித்தது..

“நீண்டதொரு பயணமாக இது அமைந்துள்ளது. இந்த சாதனையை என் அப்பாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைத்து நேரத்திலும் என்னுடன் அவர் இருந்துள்ளார். நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால், எதிர்பாராத விதமாக சுழற்பந்து வீச்சாளர் ஆனேன். நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது புதிய பந்தில் பவுலிங் செய்ய முத்தையா முரளிதரன் விரும்பவில்லை. அதனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

டீசென்டான முதல் தர கிரிக்கெட் அனுபவம் எனக்கு இருந்தது. நான் டெஸ்ட் பவுலரா என சந்தேகித்த நபர்களும் உள்ளனர். இதோ 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாதனை மோசமானது இல்லை. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

இந்தப் போட்டியை இங்கிலாந்து டி20/ஒருநாள் போட்டி போல அணுகுகிறது. ஆனால், நாங்கள் எங்களது திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். அது எங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறோம். இந்தப் போட்டி இப்போதைக்கு இரண்டு பக்கமும் சமநிலையில் தான் உள்ளது” என தெரிவித்தார்.

அஸ்வினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ரசிகர்கள் என இந்த பட்டியல் நீள்கிறது.

அஸ்வினின் ஐ’நூறு மைல்கல்

  • 2013 - 100வது விக்கெட் - டேரன் சமி, மேற்கு இந்தியத் தீவுகள்
  • 2016 - 200வது விக்கெட் - கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து
  • 2017 - 300வது விக்கெட் - லஹிரு கமகே, இலங்கை
  • 2021 - 400வது விக்கெட் - ஜோஃப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து
  • 2024 - 500வது விக்கெட் - ஜாக் கிராலி, இங்கிலாந்து

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x