Published : 11 Feb 2024 04:28 PM
Last Updated : 11 Feb 2024 04:28 PM

குடும்ப பாரமும் உழைப்பின் பலனும் - இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப் யார்?

ஆகாஷ் தீப் | கோப்புப் படம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி இல்லை என்பது பெரும் பின்னடைவு. அதோடு ஸ்ரேயஸ் அய்யரும் இல்லை என்பது கூடுதல் பின்னடைவு. இந்தப் பின்னடைவுகளுக்கு மத்தியில் ஆகாஷ் தீப் என்ற பிஹாரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது.

பிஹாரைச் சேர்ந்தவர் என்றாலும் பெங்கால் அணிக்கு ஆடியதன் மூலமே ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்புகள் வரப்பெற்றன. இவருக்கு வயது 27. 2019-ம் ஆண்டிலிருந்து இவர் பெங்காலுக்கு ஆடிவருகிறார். இவரது ஐபிஎல் அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகும். இவர் கேரளாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஆடிக் கொண்டிருந்த போது ஓய்வறையில் வீரர்கள் கரகோஷம் செய்தது இவருக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் இவர் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்ட விவரம் இவருக்கே தெரியவந்தது. பெங்கால் அணிக்காகவும் இந்தியா ஏ அணிக்காகவும் பல நல்ல பந்து வீச்சினை செய்துள்ளார் ஆகாஷ் தீப்.

“விரைவில் அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இத்தனை விரைவில் கனவு மெய்ப்படும் என்று கருதவில்லை” என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் தீப். இவர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆல்ரவுண்டராக, நட்சத்திரமாக பெங்கால் துர்க்காப்பூரில் திகழ்ந்தவர் என்று கிரிக் இன்போ தகவல் கூறுகின்றது. அங்கிருந்து பிறகு கொல்கத்தா முதல் டிவிஷன் லீக், பிறகு யு-23 அணிக்கு ஆடினார். பிறகு முதல் தரக் கிரிக்கெட்டுக்கு முன்னேறினார்.

பிஹார் சசராம் பகுதியில் சாதாரண பள்ளி ஆசிரியர் தான் அகாஷ் தீப்பின் தந்தை. பிஹாரில் அப்போது கிரிக்கெட் இல்லை. ஏனெனில் பிசிசிஐ தடை செய்திருந்தது. குறிப்பாக, சசாரம் பகுதியில் கிரிக்கெட் ஆடுவது குற்றச் செயலுக்குச் சமம் என்கிறார் ஆகாஷ் தீப். அதாவது தன்னுடன் யாரும் சேரக்கூடாது; ஏனெனில் கிரிக்கெட்டில் வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் என்று மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எச்சரிப்பார்கள் என்று கூறுகிறார் ஆகாஷ் தீப்.

“அதுபோன்ற இடத்தில் கிரிக்கெட் ஆடி என்ன பயன்? கல்வியையும் விட்டு விட்டு கிரிக்கெட்டிலும் முன்னேற முடியாத சூழல்தான் அங்கு நிலவியது. அப்படித்தான் என் பெற்றோரும் நினைத்தனர். என் தந்தை பிஹார் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு எழுது என்று என்னை தொந்தரவு செய்து வந்தார். நானும் பரிட்சைக்குச் செல்வேன் ஆனால், பேப்பர் என்னவோ வெற்றுத்தாளாகவே இருக்கும். ஏனெனில் கிரிக்கெட் எனது பிரியமாக இருக்கும் போது நான் கரியர் நோக்கிச் செல்ல விரும்பவில்லை” என்கிறார் ஆகாஷ் தீப்.

ஆனால் அவரது வாழ்க்கையில் இருவரது மரணம் இடிபோல் இறங்கியது. முதலில் தந்தை, பிறகு மூத்த சகோதரர். இருவரும் ஆறுமாத கால இடைவெளியில் மரணிக்க, இரண்டு சகோதரிகள் மீதான பொறுப்பு ஆகாஷ் தீப்பின் மீது விழுந்தது. “என்னுடைய தந்தையும் தமயனும் 6 மாத கால இடைவெளியில் மரணித்தனர். எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்டேன். ஒரு நண்பர் உதவியுடன் துர்க்காப்பூரில் கிளப் ஒன்றில் இணைந்தேன். டென்னிஸ் பந்து கிரிக்கெட் மூலம் கொஞ்சம் பணம் கிடைத்தது. லெதர் பந்து கிரிக்கெட் ஆட வேண்டும். ஆனால் பணம் இல்லை. எனவே மாதத்திற்கு 3-4 நாட்கள் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் ஆடுவேன். மாவட்டம் நெடுகிலும் டென்னிஸ் பாலில் ஆடி ரூ.6000 வரை சம்பாதித்தேன். இது என் செலவுகளுக்கு உதவியது” என்கிறார் ஆகாஷ் தீப்.

29 முதல் தரப் போட்டிகளில் ஆடிய ஆகாஷ் தீப் 103 விக்கெட்டுகளைக் கைப் பற்றியுள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைச் சமீபமாக கைப்பற்றினார். “இன்ஸ்விங்கர் எனது ஸ்டாக் பந்தாகும், ஆனால் அந்த லெவலில் அவுட் ஸ்விங்கரும், ரிவர்ஸ் ஸ்விங்கும் போட வேண்டும், முக்கியமாக ஸ்விங்கைக் கட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் நான் இருந்த போது மனத்திடம் முக்கியம் என்பதைக் கற்றுக் கொண்டேன்” என்றார். இப்போது இவருடன் உறுதுணையாக இன்னொரு பெங்கால் பவுலரும் உள்ளார். அவர் வேறு யாரும் அல்ல முகேஷ் குமார்தான். பல கடினப் பாடுகளில் இருந்து உழைப்பால் இந்திய டெஸ்ட் அணிக்கு ஆடும் அளவுக்கு உயர்ந்துள்ள ஆகாஷ் தீப் வெற்றி பெற வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x