Published : 06 Feb 2024 08:16 AM
Last Updated : 06 Feb 2024 08:16 AM
போர்வோரிம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவாவில் உள்ள போர்வோரிம் பகுதியில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் கோவா 241 ரன்களும், தமிழகம் 273 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய கோவா 65.5 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும் பிரதோஷ் ரஞ்ஜன் பால் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 137 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. சுரேஷ் லோகேஷ்வர் 34, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 49.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் லோகேஷ்வர் 129 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், பிரதோஷ்ரஞ்ஜன் பால் 125 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். பாபா இந்திரஜித் 7, விஜய் சங்கர் 13ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தமிழக அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடிய உள்ள தமிழகம் 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் தனது பிரிவில் 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT