Last Updated : 09 Feb, 2018 03:12 PM

 

Published : 09 Feb 2018 03:12 PM
Last Updated : 09 Feb 2018 03:12 PM

சாஹல், குல்தீப் ஜோடி ஒரு ரன் எடுப்பதைக் கூட சவாலாக்கி விட்டனர்: ஜே.பி.டுமினி

குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் என்ன வீசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளத் திண்டாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள், இவர்கள் இருவரையும் எதிர்கொள்ள வித்தியாசமான வழிமுறைகளை ஆலோசித்து வருகின்றனர்.

தொடரில் 3-0 என்று பின் தங்கியுள்ள தென் ஆப்பிரிக்கா தொடரைச் சமன் செய்ய படாதபாடு படவேண்டிய நிலையில், சாஹல், குல்தீப் யாதவ் அந்த அணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்கின்றனர்.

இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் ஜே.பி.டுமினி கூறும்போது, “தாங்கள் என்ன செய்ய வேண்டிய தேவையுள்ளது என்பதைப் பொறுத்த அளவில் சூழ்நிலைகளை சாஹலும், குல்தீப் யாதவ்வும் அருமையாகக் கணித்தனர். அதாவது என்ன வேகத்தில் வீச வேண்டும், எந்த லெந்தில் வீச வேண்டும் என்று அருமையாகவே கணித்தனர்.

எங்களை சிங்கிள்கள் கூட எளிதாக எடுக்க இருவரும் அனுமதிக்கவில்லை. எங்களில் பலரும் அவர்களது கூக்ளியை சரிவரக் கணிக்கத் தவறினோம். நாங்கள் சரியாக ஆடவில்லை. அவர்களை எதிர்கொள்வதில் வித்தியாசமான வழிமுறைகளை பரிசீலித்து வருகிறோம். அவர்கள் எங்களை அனைத்து விதங்களிலும் முறியடித்து விட்டனர்.

இந்தத் தொடரை நாங்கள் இன்னமும் இழந்து விடவில்லை என்பதே உத்வேகமூட்டும் காரணியாக உள்ளது.

இந்தத் தொடர் முழுதும் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்தோம், அவர்கள் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திட்டமிடல் நல்ல முறையில்தான் இருந்தது, ஆனால் அதனைச் செயல்படுத்துவதில்தான் சோடை போனோம்.

பேட்டிங்கில் கூட்டணிகள் அமைக்க வேண்டும். விராட் கோலி இன்னிங்சைப் பாருங்கள் 100% ஸ்ட்ரைக் ரேட் இல்லை, ஆனால் கடைசியில் தூக்கினார்.

4-வது ஒருநாள் போட்டிக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். அவர் அணிக்கு திரும்புவது பலவிதங்களில் நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டும் அம்சமாகும்” என்றார் டுமினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x