Published : 04 Jan 2024 03:06 PM
Last Updated : 04 Jan 2024 03:06 PM

கேப்டவுன் பிட்ச் விவகாரம்: தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் அதிர்ச்சியும் பின்னணியும்

கேப்டவுனில் நேற்று தொடங்கிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 23 விக்கெட்டுகள் விழுந்து எதிர்மறை உலக சாதனையாக அமைந்தது. மொகமது சிராஜின் பந்துகள் அவருக்கே புரியாமல் பவுன்ஸுடனும் ஸ்விங்குடனும் சென்றது அவரது முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை கிளப்ப பேட்டர்களின் முகத்தில் பீதியைக் கிளப்பியது.

ஒரே நாளில் டாஸ் வென்று பேட் செய்த அணி 2வது முறையாக களமிறங்கி அதிலும் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளதோடு இந்திய அணி தொடரை ட்ரா செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் கொஞ்சம் தேற்றிக் கொள்ளும். ஏனெனில் கடந்த சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் தாறுமாறாக இன்னிங்ஸ் தோல்வி அடைந்து புள்ளிகளை இழந்ததோடு குறித்த நேரத்தில் ஓவர்களை முடிக்காததற்காக பாயிண்டுகள் குறைக்கப்பட்டு விட்டன. ஆகவே இந்த டெஸ்ட் வெற்றி பல முனைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

விராட் கோலியைத் தவிர இந்திய பேட்டர்கள் ஒருவருக்கும் இத்தகைய பிட்சில் ஆடுவதற்கான டெக்னிக் இல்லை. 2002-ல் நியூஸிலாந்தில் இப்படிப்பட்ட பிட்ச்களை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு அமைத்தனர், ஆனால் அதிலும் சேவாக் 2 சதங்களை விளாசி தான் யார் என்று நிரூபித்தார். விராட் கோலிதான் உலகின் கடைசி டெஸ்ட் சாம்பியன் வீரராக திகழ்வார்போல. அவரது ஆட்டம் அப்படி. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்வார்களோ அதே இடத்தில் இந்திய பவுலர்களை வீசச்சொல்லி பயிற்சி செய்திருக்கிறார் கோலி. இந்த உழைப்பும் அந்த மண்ணை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியும் இந்திய அணியில் வேறொருவருக்கும் இல்லை என்பது போட்டியை சீரியஸாகப் பார்ப்பவர்களுக்குப் புலப்படும்.

இந்நிலையில், உள்ளூர் அணிக்கே அவர்களது பிட்சின் அதிவேகத்தன்மையும் சீரற்ற பவுன்ஸும் அதிர்ச்சியளித்துள்ளது. இதனை தன் கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டீன் எல்கரே கூறியுள்ளார்.

நேற்று முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது டீன் எல்கர் கூறும்போது, “பொதுவாக இங்கு பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாகவே இருக்கும். பேட்டர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால் முதல் நாளிலேயே பிட்ச் போகப்போக அதிக வேகம் எடுக்கத் தொடங்கியது. இது எதிர்பாராதது என்பதோடு ஆச்சரியமாகவும் இருந்தது.” என்றார்.

முன்னாள் வீரர் ஆஷ்வெல் பிரின்ஸ், “கேப்டவுன் பிட்ச் முதல் நாளில் இப்படி வேகமும் எழுச்சியும் கொண்டதாக நான் பார்த்ததில்லை. அதோடு சீரற்ற முறையில் பந்துகள் எழும்பியும் தாழ்வாகவும் வந்ததையும் நான் ஆச்சரியத்துடன் தான் பார்க்கிறேன். பொதுவாக பேட்டர்கள் பந்தின் வேகத்தையெல்லாம் ஆடிவிடுவார்கள். ஆனால் பவுன்ஸ் சீரற்ற முறையில் இருந்தால் அது கடினம்.. மிகக்கடினம். இதோடு பந்துகள் ஸ்விங் ஆகின.” என்றார்.

முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்குக் காரணம் சீரற்ற பவுன்ஸ்தான். லுங்கி இங்கிடி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய முனையில் அதிஎழுச்சி கண்டது பந்துகள்.

எல்கர் மீண்டும் கூறுகையில், “சாதாரணக் கண்களில் பார்த்தால் பிட்ச் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என்று தோன்றும். உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட நேற்று இருந்தது போல் மோசமாக இருந்ததில்லை. நேற்று பிட்ச் பயங்கரம் தான். பிட்ச் இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் பேட்டிங் எடுத்திருக்க மாட்டேன். ஆனால் தெரியாமல் பேட்டிங் எடுத்ததால் அந்த முடிவு சரியே என்று கூறுவேன்” என்றார்.

அதேநேரம், இந்தப் பிட்சைத் தயாரித்தவர் தொழிலுக்குப் புதிது என்றும் இதுதான் அவரது முதல் டெஸ்ட் பிட்ச் என்றும் ஆஷ்வெல் பிரின்ஸ் கூறுகிறார். மேலும் பிரின்ஸ் கூறுகையில், “பிட்ச் பற்றிய விவாதத்தை நிறுத்தி விட்டு கிரிக்கெட்டைப் பார்த்தால், சிராஜ் தன் வாழ்க்கையின் சிறந்த பவுலிங்கை வீசினார்.

பொதுவாக இந்திய பவுலர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தனர். பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை விட சிறப்பாகவே ஆடினர். விராட் கோலி, எய்டன் மார்க்ரம், ரோகித் சர்மா போல் இந்தப் பிட்சில் ஆட வேண்டும். ஆனால் இரண்டு அணிகளுமே ஆடவில்லை எனும் போது பிட்ச் பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x