SA vs IND 2nd Test | டக் அவுட் 6 - சுருட்டலுக்குப் பின் 153 ரன்களில் சுருண்ட இந்திய அணி!

SA vs IND 2nd Test | டக் அவுட் 6 - சுருட்டலுக்குப் பின் 153 ரன்களில் சுருண்ட இந்திய அணி!
Updated on
2 min read

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய 6 பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகினர்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி விளையாடிய அந்த அணி 23.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தது. ரபாடா வீசிய 3வது ஓவரில் போல்டானார் யஷஸ்வி. அடுத்து வந்த சுப்மன் கில், ரோகித்துடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 15-வது ஓவரில் நந்த்ரே பர்கர் வீசிய பந்தில் ரோகித் சர்மா 39 ரன்களில் விக்கெட்டாக, கோலி களத்துக்கு வந்தார். 21-வது ஓவர் வரை தாக்குப்பிடித்த சுப்மன் கில் நந்த்ரே பர்கரின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 36 ரன்களில் கிளம்பினார்.

இதையடுத்து விராட் கோலி மட்டும் ஒருபுறம் நிலைத்து ஆட, மறுபுறம் வந்த ஸ்ரேயாஸ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்ப, 33வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்து லுங்கி இங்கிடி வீசிய 34வது ஓவரில், கே.எல்.ராகுல் 8 ரன்களுடனும், ஜடேஜா, பும்ரா டக்அவுட்டாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி. அத்துடன் ரன் எதுவும் இல்லாமல் மெய்டன் ஆனது அந்த ஓவர்.

அடுத்த ஓவரில் நம்பிக்கையளித்துக்கொண்டிருந்த விராட் கோலி 46 ரன்களில் அவுட்டாக, தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அடுத்தடுத்து டக் அவுட்டாக 34.5 ஓவரில் 153 ரன்களுடன் சுருண்டது இந்திய அணி.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களைச் சேர்த்துள்ளது. ஐடன் மார்க்ராம் 36 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in