Published : 31 Dec 2023 08:31 AM
Last Updated : 31 Dec 2023 08:31 AM
புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால் இந்திய மல்யுத்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் நடத்திய போராட்டங்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மல்யுத்த நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்ஜய் சிங் தேர்வான நிலையில், அவர் விதி முறைகளை மீறியதாக கூறி ஒட்டு மொத்த சம்மேளனத்தையும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் மல்யுத்த வீரரும், போராட்டத்தில் பங்கேற்றவருமான பஜ்ரங் பூனியா தனது எக்ஸ்வலைதள பதிவில், “கடந்த சில மாதங்களாக மல்யுத்த நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குவீரர்களைத் தயார் செய்வதற்காக எந்தவொரு தேசியஅளவிலான போட்டிகளுக்கும், பயிற்சி முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
7 மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. ஆனால் யாரும் இதைபற்றி தீவிரமாக எடுத்துக்கொள்வதாக தெரியவில்லை. கடந்த 4 ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 பதக்கங்களை மல்யுத்தம் வழங்கி உள்ளது. எனவே, வீரர்களின் எதிர்காலத்தை காப்பாற்றும் வகையில் அனைத்து மல்யுத்த நடவடிக்கைகளையும் விரைவில் தொடங்குமாறு மத்திய விளையாட்டு அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT