Published : 26 Dec 2023 04:23 PM
Last Updated : 26 Dec 2023 04:23 PM

மீண்டும் கேட்ச்களை விட்ட பாகிஸ்தான்: ஆஸி. அணி தடுமாற்றங்களுடன் ஸ்டெடி!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங்கில் மீண்டும் சொதப்பியது. இதனையடுத்து ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் மார்னஸ் லபுஷேன் 44 ரன்களுடனும் ட்ராவிஸ் ஹெட் 9 ரன்களுடனும் நாளை 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கவுள்ளனர். கடைசி ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் அகா சல்மான் பந்தில் ட்ராவிஸ் ஹெட் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஆனால், ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஷான் மசூதின் இடது கை பக்கம் கேட்ச் செல்ல அவரும் ஃபுல் ஸ்ட்ரெச் டைவ் அடித்துப் பார்த்தார் பந்து கையில் ஒட்டாமல் நழுவியது. இந்தக் கேட்சை எடுத்திருந்தால் இந்த நாள் ஆட்டம் பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது என்று கூறலாம். ஆரம்பத்தில் வார்னருக்கும் ஒரு கேட்சை ஷபீக் நழுவ விட்டார். இப்படியாக ஒரு புது டெஸ்ட் முதல் நாளில் பாகிஸ்தான் பீல்டிங் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹின் அப்ரீடி பந்துகள் வேகம் இழந்து விட்டன. அவர் 130 கிமீ வேகம் வீசுவதற்குத் திணறுகிறார். ஆஸ்திரேலிய பிட்ச்கள் என்பதால் கொஞ்சம் ஸ்விங் பவுன்ஸ் என்று அவர் பெரிய அளவில் அடி வாங்காமல் தப்பினார். முதல் டெஸ்ட் போட்டியில் 176 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைத்தான் அவர் கைப்பற்றியது கடும் விமர்சனங்களுக்குரியதானது.

இன்று மெல்போர்ன் பிட்ச் மற்றும் சூழ்நிலைமைகள் பவுலிங்குக்குச் சாதகமாக அமைந்த போதிலும் பாகிஸ்தான் பவுலர்களின் வேகம் குறைவால் சூழ்நிலையின் சாதகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடும் மழையினால் முதல் நாள் ஆட்டத்தில் 66 ஓவர்களே வீச முடிந்தது. குக்கபரா பந்து ஸ்விங் ஆனது, பிட்ச் கிரீன் டாப், பாகிஸ்தான் அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலிய பிட்ச் என்பதால் ஷாஹின் அஃப்ரீடி சரியாக வீசாவிட்டாலும் ஒரு பந்து நல்ல அளவில் விழுந்து ஸ்விங் ஆன போது வார்னர் எட்ஜ் செய்தார். ஆனால் முதல் ஸ்லிப்பில் அப்துல்லா ஷபீக் கேட்சை தரையில் விட்டார். மார்க் வாஹ் ஒரு சிறந்த ஸ்லிப் பீல்டர் அவர் பார்வையில் அது ஒரு ரெகுலர் ஸ்லிப் கேட்ச், இதைத்தான் வர்ணனையிலும் அவர் சொன்னார். மற்றொரு வர்ணனையாளர் இயன் ஸ்மித், ஸ்லிப்பில் நிற்பவர் இப்போதுதான் முதன் முதலாக ஸ்லிப்பில் நிற்கிறாரோ என்று கிண்டலடித்தார்.

இந்தக் கேட்சை விட்டதன் பலன் வார்னர்-கவாஜா ஜோடி 90 ரன்களைச் சேர்த்ததில்தான் முடிந்தது. ஹசன் அலி தன் தேர்வை நிரூபித்தார். உஸ்மான் கவாஜா (42) விக்கெட்டை பிரமாதமான பந்தில் வீழ்த்தினார். முன்னதாக வார்னர் அபாயகரமான இன்னொரு இன்னிங்ஸிற்குத் தயாரான போது அகா சல்மான் பந்து ஒன்று 7வது ஸ்டம்புக்குச் சென்றது, அதைப் போய் நோண்டி எட்ஜ் ஆகி 38 ரன்களில் வெளியேறினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஹசன் அலி ஒரு நல்ல ஸ்பெல்லை வீசிய போதுதான் கவாஜா ஆட்டமிழந்தார். ஷாஹின் அஃப்ரீடியும் இவரும் சேர்ந்து வீசும்போது ஸ்மித்தும் லபுஷேனும் விக்கெட்டை கொடுக்காமல் ஆடினால் போதும் என்ற பாதுகாப்பு உத்தியுடன் ஆடினர். உணவு இடைவேளைக்குப் பிறகு 15 ஓவர்களில் ஆஸ்திரேலியாவால் 24 ரன்களையே எடுக்க முடிந்தது. மழை வந்தது.

பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார், இடது கை ஸ்விங் பவுலர் மீர் ஹம்சா சேர்க்கப்பட்டார். மிர் ஹம்சா டைட்டாக வீசினார். விக்கெட் எடுப்பது போல் வீசவில்லை. 15 ஓவர்களில் 27 ரன்கள்தான் கொடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 75 பந்துகளில் 26 ரன்கள் என்று செம தடவல் இன்னிங்சை ஆடி கடைசியில் அமிர் ஜமால் பந்து ஒன்று லேசான எட்ஜ் எடுக்க ஆட்டமிழந்தார். நடுவர் நாட் அவுட் என்றார். ஆனால் ரிவியூவில் அவுட் உறுதியானது. ரிஸ்வான் கேட்சை எடுத்தார்.

லபுஷேன் 120 பந்துகள் எடுத்துக் கொண்டு 3 பவுண்டரிகளுடன் 44 ரன்களை கடினமாக எடுத்து ஆடி வருகிறார். ஹெட்டிற்கு கடைசி ஓவரில் கேட்சை விட்டனர், நாளை பிட்ச் வெயிலில் காய்ந்து இன்னும் கொஞ்சம் விரைவாகி விடும், அப்போது ஹெட்டை வீழ்த்தவில்லை எனில் பெரிய பிரச்சினையே பாகிஸ்தானுக்கு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x