Published : 19 Dec 2023 08:46 AM
Last Updated : 19 Dec 2023 08:46 AM

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: 4-வது சுற்றில் குகேஷுக்கு வெற்றி

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 44-வது நகர்த்தலின் போது வெற்றிபெற்றார். இதன் மூலம் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இந்த தொடரில் குகேஷுக்குஇது முதல் வெற்றியாக அமைந்தது. முதல் 3 சுற்றுகளையும் அவர்,டிரா செய்திருந்தார்.

டிரா செய்த ஹரிகிருஷ்ணா: மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உக்ரைனின் பாவெல் எல்ஜனோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன் எரிகைசி 54-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் மோதிய ஆட்டம் 41-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.

ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ தனது 4-வது சுற்றில் ஹங்கேரியின் சனான் சுகிரோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பர்ஹாம் மக்சூட்லூ 34-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். 4 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, குகேஷ்ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ், ஹங்கேரியின் சனான் சுகிரோவ், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முறையே 3 முதல் 7-வது இடங்களில் உள்ளனர். செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

5-வது நாளான இன்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் குகேஷ் - சனான் சுகிரோவ், ஹரிகிருஷ்ணா - பர்ஹாம் மக்சூட்லூ, அர்ஜுன்எரிகைசி - லெவோன் அரோனியன், அலெக்சாண்டர் ப்ரெட்கே - பாவெல் எல்ஜனோவ் மோதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x