Published : 15 Dec 2023 05:25 AM
Last Updated : 15 Dec 2023 05:25 AM

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய மகளிர் அணி 410 ரன் குவித்து சாதனை

நவி மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் நாள்ஆட்டத்தின் முடிவில் 94 ஓவர்களில், 7 விக்கெட்கள் இழப்புக்கு 410 ரன் குவித்து சாதனை படைத்தது.

நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய மகளிர் அணி தொடக்க விக்கெட்களை விரைவாக இழந்தது. ஸ்மிருதி மந்தனா 17 ரன்னில் லாரன் பெல் பந்திலும், ஷபாலி வர்மா 19 ரன்களில் கேத் கிராஸ் பந்திலும் போல்டானார்கள். இதையடுத்து சதீஸ் சுபாவுடன் இணைந்தஜெமிமா ரோட்ரிக்ஸ் இன்னிங்ஸை கட்டமைத்தார்.

சிறப்பாக விளையாடிய சுபா 76 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 69ரன்கள் எடுத்த நிலையில் சோஃபிஎக்லெஸ்டோன் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 99 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் கேத் கிராஸ் பந்தில் போல்டானார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்து விக்கெட் கீப்பரான யஸ்திகா பாட்டியா ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.

இதனால் இந்திய அணி 61-வது ஓவரில் 300 ரன்களை கடந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 81 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 49ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். யஸ்திகா பாட்டியா 88 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் சார்லி டீன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய தீப்திசர்மா அதிரடியாக விளையாடினார். இதனால் 89.1-வது ஓவரில் இந்திய அணி 400 ரன்களை எட்டியது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 88வருடங்களுக்குப் பிறகு முதல் நாள் ஆட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த 2-வது அணி என்ற சாதனையை படைத்தது இந்திய மகளிர் அணி. இற்கு முன்னர் 1935-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 431 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தது.

தீப்தி சர்மாவுக்கு உறுதுணையாக விளையாடிய ஸ்னே ராணா 30 ரன்களில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் பந்தில் போல்டானார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய மகளிர் அணி 94 ஓவர்களில், 7 விக்கெட்கள் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா 95பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், பூஜா வஸ்த்ராகர் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x