Published : 04 Jan 2018 10:43 AM
Last Updated : 04 Jan 2018 10:43 AM

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று மோதல்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட பாரம்பரியமிக்க இந்த டெஸ்ட் தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே தொடரை கைப்பற்றி விட்டது. மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய போதும் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் சிட்னி மைதானத்தில் இரு அணிகளும் கடைசி டெஸ்ட்டில் இன்று மோதுகின்றன.

மதிப்புமிக்க தொடரை 0-3 என இழந்துவிட்டதால் ஆறுதல் வெற்றி பெற ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தீவிரம் காட்டக்கூடும். அந்த அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் காயம் அடைந்துள்ளார். இதனால் இன்றைய டெஸ்ட்டில் அவர் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் வோக்ஸ் விளையாடாத நிலையில் லெக் ஸ்பின்னரான மேசன் கிரேனை அறிமுக வீரராக களமிறக்க இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது.

முதல் 3 ஆட்டங்களிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாத இங்கிலாந்து அணி மெல்பர்ன் டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டது. குக் 244 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பி உள்ளார். மேலும் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடும் அந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் கைப்பற்றி இழந்த பார்மை மீட்டார்.

இதனால் சிட்னி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது ஜோ ரூட் குழு. இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 4 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது. அதிலும் 2011-ல் நடைபெற்ற ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்களில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. எனினும் இம்முறை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது.

ஏனெனில்ஸ்மித் இந்தத் தொடரில் ரன்வேட்டையாடி வருகிறார். அவர், 3 சதங்கள் உட்பட 604 ரன்களை 151 சராசரியுடன் குவித்துள்ளார். ஒட்டுமொத்த பந்து வீச்சுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி வரும் அவரை, விரைவில் ஆட்டமிழக்க செய்வதற்கான வழிகளை கண்டறிந்தால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இங்கிலாந்து அணி உருவாக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x