Published : 09 Jan 2018 11:49 AM
Last Updated : 09 Jan 2018 11:49 AM

தற்போதைய ஃபார்மை வைத்தே ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்: விராட் கோலி பேட்டி

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் படுமொசமாக பேட் செய்த ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுத்தது ஏன்? அதுவும் ரஹானேயை நீக்கி விட்டு ஏன் சேர்க்க வேண்டும் என்ற கேள்விகள் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளதையடுத்து விராட் கோலி அதற்குப் பதில் அளித்தார்.

ஆட்டம் முடிந்தவுடன் விராட் கோலி கூறியதாவது:

ரோஹித் சர்மா இந்த டெஸ்ட்டுக்கு முந்தைய 3 போட்டிகளில் ரன்கள் எடுத்தார். மேலும் நன்றாக ஆடினார். எனவே விமர்சனங்கள் எப்போதும் முன்னமேயே இதைச் செய்திருக்கலாம் அதைச்செய்திருக்கலாம் என்று வருவது சகஜமே. ஆனால் கிரிக்கெட் வீரரின் நடப்பு பார்மை வைத்தே அணிச்சேர்க்கை முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில்தான் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

தயாரிப்பில் எந்த கோளாறுகளும் இல்லை. அவர்களும் 2-வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அவர்கள் இங்கு விளையாடிக் கொண்டேயிருக்கின்றனர், இருந்தாலும் 130 ரன்களுக்குச் சுருட்டினோம். உண்மையில் பேட்டிங் சொதப்பலால்தான் தோல்வி. விக்கெட்டுகளை கொத்தாக இழப்பது டெஸ்ட் போட்டியில் வேண்டத்தகாதது.

208 ரன்கள் விரட்ட முடியக்கூடியதுதான், ஆனால் யாராவது ஒரு வீரர் 70-75 ரன்கள் எடுக்க வேண்டும். 20-25-30 ஒரு போதும் உதவாது. ஒரு பெரிய கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி நிச்சயம், அதைச் செய்ய தவறி விட்டோம்.

20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு முன்னுரிமை, ஆனால் பேட்ஸ்மென் சரியாக ஆடவில்லையெனில் 20 விக்கெட்டுகள் எடுத்து பயனில்லை. நிச்சயம் பேட்டிங் முன்னேற்றமடைந்தால்தான் வெற்றி வாய்ப்பு சாத்தியம். முதல் இன்னிங்ஸில் ஹர்திக் பாண்டியா அருமையாக ஆடினார். முதல் இன்னிங்சில் அவர்களை 50-60 ரன்கள் குறைவாக மட்டுப்படுத்தியிருந்தால் விஷயம் வித்தியாசமாக இருந்திருக்கும். பேட்டிங்கில் இன்னும் கவனம் தேவை என்பதில் கேள்வியே இல்லை.

பிட்ச் உண்மையில் அருமையாக இருந்தது. உண்மையில் எனக்கு இந்தப் பிட்ச் பிடித்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அருமையான பிட்ச். இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதை பெருமையாகக் கருதுகிறேன். தொடருக்கு இந்த டெஸ்ட் அருமையான தொடக்கம்.

மீண்டும் ஒரு உயிரோட்டமுள்ள பிட்ச் கிடைத்தால் நிச்சயம் அதனை சிறப்பாகப் பயன்படுத்துவோம். ஆனாலும் இன்னும் நன்றாக பேட் செய்ய வேண்டும் என்பதும் மிகஅவசியம்.

இந்த முறை செய்த தவறுகளை ஆராய்ந்து அதனைச் சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x