Published : 24 Nov 2023 06:43 AM
Last Updated : 24 Nov 2023 06:43 AM

டிசம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள்

புதுடெல்லி: வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைபெறும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350-க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “நாட்டில் முதன்முறையாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் கீழ் அமைந்துள்ள 3 மைதானங்களில் மொத்தம் 7 பிரிவுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் திருப்புமுனையாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் மைதானங்களில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகளான ஷீத்தல் தேவி, பாவினா பட்டேல், ஏக்தா பியான், நீரஜ் யாதவ், சிங்ராஜ், மணீஷ், சோனல், ராகேஷ் குமார் மற்றும் சரிதா ஆகியோர் தங்களுடைய சொந்த மாநிலங்கள் தரப்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x