Last Updated : 21 Nov, 2023 06:53 AM

 

Published : 21 Nov 2023 06:53 AM
Last Updated : 21 Nov 2023 06:53 AM

போராட மறந்தது ஏனோ? - இந்தியா @ ODI WC Final

8 வாரங்களாக நடந்த அற்புதமான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா மீண்டும் தனது உறுதியையும், உயர்தர பீல்டிங்கையும் வெளிப்படுத்தி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் நம்பிக்கையை சிதைத்தது. கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விகள் என்பது ஓர் அங்கம் தான். ஆனால் தோல்வி எந்த வகையில் அமைகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். லீக் ஆட்டத்தில் 9 வெற்றிகளையும், அரை இறுதியில் வலுவான நியூஸிலாந்தையும் தகர்த்த இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் பந்து வீச்சும், பீல்டிங்கும் இறுதிப் போட்டியில் நிர்கதியானது.

டிராவிஸ் ஹெட்டின் அபாரமான ரன்னிங் கேட்ச் 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் இந்தியாவின் நம்பிக்கையை தகர்த்தது. 30 மீட்டர் வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த முதல் பவர்பிளேவின் கடைசி ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு சிக்ஸர்மற்றும் ஒரு பவுண்டரி அடித்திருந்த அவர், பவர்பிளே முடிவதற்குள் மீதமிருந்த சில பந்துகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற போது சாத்தியமே இல்லாத கேட்ச்சால் துரதிருஷ்டவசமாக நடையை கட்டினார்.

10 ஓவர்களில் இந்திய அணி 80 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. ஆனால் அடுத்த 30 ஓவர்களில் இந்திய அணியால் மேற்கொண்டு 117 ரன்களே எடுக்க முடிந்தது. இங்குதான் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவுக்கு முடிவு கட்டப்பட்டது. தொடக்கத்தில் ஷுப்மன் கில் எப்படி விக்கெட்டை எளிதாகதாரை வார்த்தாரோ அதேபோன்று ஸ்ரேயஸ் ஐயர் நடையை கட்டினார். தலை சிறந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படும் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடி களத்தில் நின்றால் எப்படியும் குறைந்த பட்சம் 270 முதல் 280 ரன்களாவது சேர்க்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இவர்கள் மட்டை வீச்சை தொடங்கும் போதுஅணியின் ரன் ரேட் நன்றாகவே இருந்தது. ஆனால் இதை அவர்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை. தாக்குதல் ஆட்டம் தொடுத்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதற்கு பதிலாக பாதுகாப்பான (தற்காப்பு) ஆட்டம் மேற்கொண்டனர். விராட் கோலி 63 பந்தில் 54, கே.எல்.ராகுல் 107 பந்தில் 66 என நடையை கட்ட இந்திய அணியின் இன்னிங்ஸ் அப்போதே முடங்கி விட்டது. ஆட்டத்தின் தலைவிதியை தீர்மானித்த 30 ஓவர்களில் மட்டை வீச்சில் இந்திய அணி போராட்ட குணத்தை சிறிதுகூட வெளிப்படுத்தவில்லை.

லீக் சுற்று மற்றும் அரை இறுதியில் ரோஹித்சர்மா அல்லது ஷுப்மன் கில்லின் தாக்குதல்ஆட்டத்தை நடுவரிசையில் சரியாக பயன்படுத்திக் கொண்ட மற்ற பேட்ஸ்மேன்கள் இறுதிப் போட்டியில் அதை செய்யவில்லை. இறுதிப் போட்டியை தவிர்த்த மற்ற ஆட்டங்களில் விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் பல்வேறு தருணங்களில் சதங்கள் விளாசி அணிக்கு அபாரமான பங்களிப்பு வழங்கினர். இந்த மேஜிக்கை பட்டம் வெல்வதற்கான அரிய வாய்ப்பு கிடைத்த ஆட்டத்தில் செய்யத் தவறி விட்டனர்.

கடைசி 10 ஓவர் பவர் பிளேவில் ரன்கள் விளாசப்படுவதற்கு பதிலாக விக்கெட் சரிவையே இந்தியா சந்தித்தது. இந்த காலக்கட்டத்தில் 43 ரன்கள் கிடைக்கப் பெற கடைசி 5 விக்கெட்களும் காலியானது. தொடர் முழுவதுமே பார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவ்மீண்டும் ஒரு முறை தான் அணியில் சேர்க்கப்பட்டதற்கான நியாயத்தை கற்பிக்கத் தவறினார்.

ஆஸ்திரேலிய அணியில் முறையான 5-வதுபந்து வீச்சாளர் கூட இல்லை. இந்த குறையைகூட இந்தியா பயன்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக எப்போதாவது பந்து வீசக்கூடிய மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோரது பந்து வீச்சில்கூட இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்காமல் பதுங்கினர். இவர்கள் 4 ஓவரைவீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

241 ரன்கள்தான் இலக்கு என்ற போதிலும் பும்ரா வீசிய முதல் பந்திலேயே வார்னர் விக்கெட் சரிய வேண்டியது. தொடர் முழுவதுமே அபாரமாக பாய்ந்து கேட்ச் செய்த கே.எல்.ராகுல் இம்முறை ஏனோ இம்மி அளவு கூட அசையாமல் நிற்க பந்து பின்புறம் நோக்கி பவுண்டரியாக பாய்ந்தது. இது கேட்ச் செய்யப்பட்டிருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் உருவாகி இருக்கும். இதன் பின்னர் முகமது ஷமி, வார்னரை வெளியேற்றினாலும் 4 ஓவர்களில் 41 ரன்கள் விளாசப்பட்டுவிட்டன. அடுத்த 6 ரன்களில் பும்ரா இரு விக்கெட்கள் வீழ்த்தி சிறிய திருப்பம் கொடுத்தார்.

ஆனால் அதன் பின்னர் மார்னஷ் லபுஷேனின் நங்கூரம் பாய்ச்சிய அரை சதமும், டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதமும் ஆஸ்திரேலிய அணியின் கைகளில் 6-வது முறையாக கோப்பை தவழ பெரிதும் உதவினர். முதலில் பேட் செய்த இந்திய அணியும், இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங்கில் ஏறத்தாழ ஒரே சூழ்நிலையை எதிர்கொண்டன. ஆனால் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழக்காமலும், ரன்களை சேகரிப்பதில் தேக்கம் அடையாமலும் பார்த்துக் கொண்டது. பேட்டிங்கில் அவர்கள் காட்டிய போராட்ட குணத்தை, இந்திய அணி செய்யத் தவறிவிட்டது.

விளையாடிய 8 இறுதிப் போட்டிகளில் 6 முறை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணிஎப்படி கைப்பற்றியது என்பதற்கு அகமதாபாத் போட்டி சிறந்த உதாரணம். எப்போதுமே நாக் அவுட் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகளில் அந்த அணியின் மனரீதியான போராட்டமும், ஆட்ட யுத்திகளும், எதிரணியை கட்டிப்போடும் மாயங்களும் வியக்கவே வைக்கின்றன.

முதலில் பேட் செய்த இந்திய அணியும், இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங்கில் ஏறத்தாழ ஒரே சூழ்நிலையை எதிர்கொண்டன. ஆனால் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழக்காமலும், ரன்களை சேகரிப்பதில் தேக்கம் அடையாமலும் பார்த்துக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x