Published : 13 Jan 2018 06:10 PM
Last Updated : 13 Jan 2018 06:10 PM

போல்ட் பந்து வீச்சில் 74 ரன்களுக்குச் சுருண்டு பாக். படுதோல்வி: தொடரை வென்ற நியூஸி.

டுனெடின் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 183 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 257 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 74 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி தழுவியது. நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 7.2 ஓவர்களில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பாகிஸ்தான் தன் ஆகக்குறைந்த ஒருநாள் ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆவதிலிருந்து தப்பினர். அதாவது ஒரு நேரத்தில் 32 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தனர் சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்கள்!

258 ரன்கள்தானே பாகிஸ்தான் எப்படியாவது போராடி வென்று விடும் என்ற எதிர்பார்ப்புக்கு டிரெண்ட் போல்ட்டின் தொடக்க ஸ்பெல் ஆணியறைந்தது. அசார் அலிக்கு கவரில் சாண்ட்னர் கேட்சை விட்டார், ஆனால் 2 பந்துகளுக்குப் பிறகு அசார் அலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை ஆட முற்பட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். பகார் ஜமான் போல்ட்டின் பந்தை கட் செய்ய முயன்று பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார். மொகமது ஹபீஸ், எட்ஜ் செய்து ராஸ் டெய்லரிடம் முதல் ஸ்லிப் கேட்சுக்கு வெளியேறினார். பாகிஸ்தான் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. பாபர் ஆஸம் இறங்கி 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்த நிலையில் டீப் கவரில் பஞ்ச் செய்தார் இரண்டு ரன்கள் ஓடலாமே என்ற ஆசையில் பாபர் ஆசம் ஓடி வர சாண்ட்னர் பந்தை பீல்ட் செய்து விக்கெட் கீப்பர் முனைக்கு அடிக்க ஆஸம் பேட் சற்றே நிலத்தில் சிக்க விக்கெட் கீப்பர் பைல்களை அகற்றும் போது வெறுங்கையுடன் முடிந்திருந்தார் ஆஸம். 13/4.

ஷோயப் மாலிக் 27 பந்துகள் போராடி 3 ரன்கள் எடுத்து பெர்கூசனின் வெளியே சென்ற பந்துடன் உறவாட முயன்று டெய்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஷதாப் கான் 0-வில் மன்ரோவின் பந்தை அசிங்கமாகச் சுற்றி பவுல்டு ஆனார். பாஹிம் அஷ்ரப் 1 சிக்சருடன் 10 ரன்கள் எடுத்து ஃபெர்குசன் வேகத்துக்கு புல் ஷாட்டில் பைன் லெக் கேட்ச் ஆகி வெளியேறினார். 30/7. ஹசன் அலி, மன்ரோ பந்தை புல் ஷாட் ஆட, சக்திவாய்ந்த ஷாட்டின் வேகத்தையும் மீறி வில்லியம்சன் மிட்விக்கெட்டில் ஸ்டன்னிங் ஒரு கை கேட்ச் எடுத்தார். 32/8. அதன் பிறகு மொகமது ஆமிர் 14 ரன்களையும் ருமான் ரயீஸ் 16 ரன்களையும் எடுத்து போல்ட்டிடம் இருவரும் ஆட்டமிழக்க கேப்டன் சர்பராஸ் அகமட் 14 ரன்களில் ஒருமுனையில் தேங்கினார். பாகிஸ்தான் 28வது ஓவரில் 74 ஆல் அவுட்.

வில்லியம்சன், டெய்லர் அரைசதத்துடன் நியூஸிலாந்து 257!

முன்னதாக நியூஸிலாந்து பேட்டிங்கில் தொடக்கத்தில் கப்தில், மன்ரோ இருவருமே சிக்ஸ் அடித்தனர். ஆனால் மன்ரோ 8 ரன்களில் பாஹிம் அஷ்ரப் எகிறு பந்துக்கு வெளியேறினார். வில்லியம்சன், கப்தில் இணைந்தனர். ரன் விகிதம் குறைந்தது, பிட்ச் மந்தமாக இருந்ததால் ஸ்கோரிங் கடினமாக அமைந்தது. அதனால் நிதானமாக ஒன்று, இரண்டு என்று எடுத்தனர். கப்தில் 62 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 எடுத்து ரன் அவுட் ஆனார்.

வில்லியம்சன், டெய்லர் சேர்ந்தனர், இறங்கியவுடன் ஷதாப் கானை இரண்டு பவுண்டரிகள் அடித்தார் டெய்லர். பாகிஸ்தான் விக்கெட்டுகள் எடுக்கும் நோக்கத்துடன் வீசாததால் வில்லியம்சன் அரைசதம் கண்டார். டெய்லர், வில்லியம்சன் கூட்டணி 74 ரன்களைச் சேர்த்தனர், அப்போது 101 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 73 அடித்த வில்லியம்சன் ருமான் ரயீஸ் பந்தில் வெளியேறினார். டாம் லேதம் சூழலுக்கு எதிராக 35 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆக்ரோஷம் காட்டினார். ராஸ் டெய்லர் 52 ரன்களில் ஷதாப் கானிடம் எல்.பி.ஆனார்.

209/3 என்ற நிலையிலிருந்து டெய்லர் ஆட்டமிழப்புடன் சேர்த்து நியூஸிலாந்து மீதமுள்ள 7 விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு இழந்தது. பாக். அணியில் ரயீஸ், ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, ஷதாப் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக டிரெண்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார், இன்னும் 2 போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால் 5-0 ஒயிட் வாஷ் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x