Published : 16 Nov 2023 08:46 PM
Last Updated : 16 Nov 2023 08:46 PM

அன்று ‘ஓய்வு முடிவு’... இன்று ‘இந்திய ஸ்டார்’ - துவண்டு எழுந்த ஷமியின் மறுபக்கம்!

மும்பை: உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக ஜொலித்து வருகிறார் இந்திய வீரர் மொகமது ஷமி. இன்று சிறப்பாக விளையாடிவரும் ஷமி, சில வருடங்கள் முன் சந்தித்த கடினமான காலகட்டங்கள் குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி. அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. நியூஸிலாந்து உடனான வெற்றிக்குப் பிறகு இது செமி பைனல் இல்லை ஷமி பைனல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் பல சாதனைகளையும் படைத்தார் ஷமி. நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸில் 5+ விக்கெட், உலகக் கோப்பையில் அதிக முறை 5+ விக்கெட்களை கைப்பற்றிய வீரர் (ஒட்டுமொத்தமாக 4 முறை), உலகக் கோப்பையில் மிக வேகமாக 50 விக்கெட் வீழ்த்திய வீரர் (17 போட்டிகளில் 50+ விக்கெட்), உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பவுலர், ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் (நடப்பு உலகக் கோப்பையில் 23 விக்கெட்) என பல சாதனைகள் அதில் அடக்கம்.

இப்படி நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் ஷமி சில வருடங்கள் முன்னர் உடற்தகுதி அடைய முடியாமல் மனதளவில் சந்தித்த பிரச்சினைகள் என அவர் தனது வாழ்க்கையில் கடந்துவந்த கடினமான காலகட்டங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் வெளிப்படுத்தியுள்ளார். "2018 இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன்பு நடந்த ஃபிட்னெஸ் தேர்வில் ஷமி தோல்வியடைந்தார். இதனால், இந்திய அணியில் அவர் இடம் பறிபோனது. ஒருநாள் என்னை அழைத்த ஷமி, என்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

எனது அறைக்கு அழைத்துச் சென்று பேசியபோது, 'நான் மிகவும் கோபமாக இருக்கிறேன், நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன்' எனக் கூறி ஷமி அதிர்ச்சியளித்தார். அப்போது ஷமியை நேராக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியிடம் அழைத்துச் சென்றேன். 'ஷமி உங்களிடம் சிலவற்றை கூற விரும்புகிறார்' என ரவி சாஸ்திரியிடம் எனக் கூற, அவர் என்னவென்று கேட்டார். அங்கேயும் 'நான் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை' என ஏற்கனவே சொன்னதையே சொன்னார் ஷமி. நாங்கள் இருவரும் அவரிடம் கேட்டது அப்போது இதுதான்... 'கிரிக்கெட் விளையாடாவிட்டால் என்ன செய்வீர்கள்? கிரிக்கெட்டை தவிர உனக்கு வேறு என்ன தெரியும்? பந்தை கொடுத்தால் எப்படி பந்துவீச முடியும் என்பது மட்டும்தானே உனக்கு தெரியும்' என்றோம்.

இதன்பின்னர் அவரை பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்ப முடிவு செய்தோம் நானும் ரவியும். ஏனென்றால், எங்களிடம் வந்துபேசும் போதே ஷமி தனது உடல்தகுதியை மட்டுமல்ல, மனதளவிலும் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் மீது அவரே கோபத்தில் இருந்தார். இதனை உணர்ந்த ரவி, அன்றைய தருணத்தில் ஷமி அதை சொன்னபோதே, 'நீ கோபமாக இருப்பது நல்லதுதான். இந்த சமயத்தில் உனது கையில் பந்தை கொடுப்பதுதான் சிறந்த விஷயம். உனக்கு என்ன கோபம் இருந்தாலும், அதனை பந்தின் வழியே காண்பிக்க முயற்சிசெய். நாங்கள் உன்னை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்ப உள்ளோம். நீ அங்கு 4 வாரங்கள் சென்று அங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் வீட்டுக்குச் செல்ல மாட்டீர்கள், நேராக கிரிக்கெட் அகாடமிக்கு செல்' எனக் கூறி அனுப்பிவைத்தார்.

சரியாக ஐந்து வாரங்கள் கழித்து, 'சார் நான் இப்போது குதிரை போல் ஆகிவிட்டேன். என்னை எவ்வளவு வேணும்னாலும் ஓட வையுங்கள்' என ஷமி என்னை மீண்டும் அழைத்து சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது ஃபிட்னஸுக்கு செலவிட்ட அந்த ஐந்து வாரங்கள் அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய தருணம்" என ஷமியின் கடின காலகட்டத்தை பகிர்ந்தார். பரத் அருண் சொன்ன காலகட்டங்களில் ஷமி தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தையை பார்க்க முடியாதது போன்ற தனிப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எண்ணம்: “அந்த நேரத்தில் எனது குடும்பம் எனக்கு ஆதரவு கொடுக்காமல் போயிருந்தால் எனது கிரிக்கெட் வாழ்க்கை காணாமல் போயிருக்கும். மிகுந்த மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த சமயத்தில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். கிரிக்கெட் குறித்து அப்போது நான் எந்த எண்ணமும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் 24-வது மாடியில் வசித்து வந்தோம். நான் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என குடும்பத்தினர் அச்சம் கொண்டிருந்தனர்.

எனது நண்பர்கள் 2-3 பேர் எப்போதும் என்னுடன் இருப்பார்கள். அதிலிருந்து வெளிவர கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு வீட்டில் சொல்லி இருந்தார்கள். அவர்கள் சொன்னபடி டேராடூனில் அமைந்துள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினேன்” - இது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் முன்பொரு முறை ஷமி தனக்கு வந்த தற்கொலை எண்ணங்கள் குறித்து பகிர்ந்துகொண்டவை. இந்த தருணங்களில் ஷமி, ஐபிஎல் தொடரை மிஸ் செய்ததும், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x