Published : 15 Nov 2023 11:35 PM
Last Updated : 15 Nov 2023 11:35 PM
மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி. அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
“நான் எனது முறைக்காக (Turn) காத்திருந்தேன். ஷார்ட்டர் ஃபார்மெட் கிரிக்கெட்டில் நான் அதிகம் விளையாடவில்லை. நாங்கள் யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகள் போன்ற பல விஷயங்கள் குறித்து பேசினோம். புதிய பந்தில் விக்கெட்களை வீழ்த்த முயற்சித்தேன். அதற்காக நிறைய பயிற்சி செய்தேன்.
இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சனின் கேட்ச்சை நழுவ விட்டேன். அப்போது மிகவும் மோசமான மன நிலையில் இருந்தேன். அவர்கள் சிறப்பாக பேட் செய்தனர். நான் எனது சான்ஸை எடுத்து பார்க்க விரும்பினேன். விக்கெட் சிறப்பாக இருந்தது. நாங்கள் பதிவு செய்த ரன்கள் போதுமானதாக இருந்தது. மைதானத்தில் பனிப்பொழிவு இல்லை. இது சிறந்த பிளாட்பார்ம். நாங்கள் 2015 மற்றும் 2019 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் தோல்வியை தழுவினோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பினேன். ஏனெனில், மீண்டும் இது போன்ற வாய்ப்பு நமக்கு எப்போது வரும் என்று தெரியாது” என ஷமி தெரிவித்தார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸில் 5+ விக்கெட்களை ஷமி கைப்பற்றி உள்ளார். உலகக் கோப்பையில் அதிக முறை 5+ விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும் அவர் (ஒட்டுமொத்தமாக 4 முறை) திகழ்கிறார். நடப்பு உலகக் கோப்பையில் 23 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரராக உள்ளார்.
உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பவுலராகவும் திகழ்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT