Published : 07 Nov 2023 06:25 AM
Last Updated : 07 Nov 2023 06:25 AM

ஆப்கானிஸ்தானுடன் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை: அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ஆஸி.

கோப்புப்படம்

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்றையஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் எளிதாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். ஏற்கெனவே இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் அரை இறுதி சுற்றில் நுழைந்துள்ளன.

இந்த வரிசையில் ஆஸ்திரேலியா 3-வது அணியாக இணைவதற்கு காத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நிலையில் மற்ற அணிகள் இல்லாதது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பெரிய அளவில் ரன் குவிப்பதில் தீவிரம் காட்டக்கூடும்.

ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோரும் சீராக ரன்கள் சேர்க்க தொடங்கி உள்ளது அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தி உள்ளது. சொந்த காரணங்களுக்காக தாயகம் சென்றிருந்த ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் அல்லது மார்கஸ் ஸ்டாயினிஸ் நீக்கப்படக்கூடும்.

மேலும் இன்றைய ஆட்டத்தில் நடுவரிசை பேட்டிங் பிரச்சினைக்கும் ஆஸ்திரேலிய அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும். பந்து வீச்சில் 19 விக்கெட்களை வேட்டையாடி உள்ள ஆடம் ஸம்பா, ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் கூட்டணி நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியானது 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இது அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களிலும் அதிக அளவிலான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பை பெறலாம் என்ற சூழ்நிலையில் களமிறங்குகிறது ஆப்கானிஸ்தான் அணி.

இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறைஆப்கானிஸ்தான் அணி நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் 2 ஆட்டங்கள் உலகக் கோப்பையில் நடைபெற்றவை. இந்த 3 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. எனினும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளை இம்முறைஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளதால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு உள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி, ரஹ்மத் ஷா, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இவர்கள் இலக்கை துரத்திய 3 ஆட்டங்களிலும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி இருந்தனர். இருப்பினும் வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டையை சுழற்றுவது என்பது சவாலாக இருக்கக்கூடும்.

பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான், நூர் முகமது ஆகியோர் சுழலிலும், நவீல் ஹல் ஹக், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ஃபசல்ஹக் பாரூக்கி ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x