Last Updated : 16 Jan, 2018 09:45 AM

 

Published : 16 Jan 2018 09:45 AM
Last Updated : 16 Jan 2018 09:45 AM

கமலேஷ் நாகர்கோடி - இந்தியாவின் புதுப்புயல்

19வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியாவுக்கு பல நட்சத்திரங்களை பரிசளித்துள்ளது. யுவராஜ் சிங், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, குல்தீப் யாதவ், ரிஷ்ப் பந்த் ஆகியோரின் வரிசையில் இந்த ஆண்டு நமக்கு அளித்துள்ள பரிசு கமலேஷ் நாகர்கோடி.

நியூஸிலாந்தில் தற்போது நடந்துவரும் ஜூனியர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், தொடர்ச்சியாக 145 கிலோமீட்டர் வேகத்துக்கும் அதிகமாக பந்துகளை வீசி, (அதில் ஒரு பந்து 149 கிலோ மீட்டர் வேகம்), ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பியுள்ளார் கமலேஷ். இந்த போட்டியில் 7 ஓவர்களை வீசிய அவர், 29 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துள்ளார். அத்துடன் இம்மாத இறுதியில் நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்க, அணிகள் போட்டிபோடும் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் இளம் புயலாக உருவெடுத்துள்ள கமலேஷ், கிரிக்கெட்டுக்கு கிடைக்க முக்கிய கரணம் ஒரு கேட்ச்தான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பயிற்சியாளர்களில் ஒருவரான சுரேந்திர சிங் ரத்தோர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஜெய்ப்பூரில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் சில சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தனர். காரை நிறுத்தி சில நிமிடங்கள் அந்த போட்டியை பார்த்துள்ளார் ரத்தோர். அந்த நேரம் பார்த்து பேட்ஸ்மேன் ஒரு பந்தை அடிக்க, காற்றாய்ப் பறந்து அந்த பந்தை கேட்ச் செய்துள்ளான் ஒரு 8 வயது சிறுவன்.

மேடுபள்ளங்கள் நிறைந்த மைதானத்தில் அந்த சிறுவன் துணிச்சலாக டைவ் அடித்து பந்தை கேட்ச் செய்தது ரத்தோரின் ஆர்வத்தை அதிகரித்தது. காரில் இருந்து வெளியே இறங்கியவர், ஆட்டம் முழுவதையும் பார்த்துள்ளார். எந்த சிறுவன், தன் கேட்ச் மூலம் அவரை கவர்ந்தானோ, அதே சிறுவன் அப்போட்டியில் தனது அதிவேகப் பந்துவீச்சால் அதிக விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளான். அந்தச் சிறுவன்தான் கமலேஷ் நாகர்கோடி.

இந்த சம்பவத்தைப் பற்றி நினைவுகூரும் ரத்தோர், “அந்தச் சிறு வயதிலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளனுக்கு தேவையான தகுதிகள் கமலேஷுக்கு இருப்பதை அறிந்தேன். கமலேஷைப் பற்றி விசாரித்தபோது, அவனது அப்பா ராணுவத்தில் சுபேதாராக இருப்பது தெரியவந்தது.

அவர் அப்போது ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்ததால், மைதானத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவனது அண்ணனை சந்தித்து பேசினேன்.

“கமலேஷை என்னிடம் விட்டுவிடுங்கள். இனி அவனது எதிர்காலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதி அளித்தேன். அவர் வீட்டில் பேசிவிட்டுச் சொல்வதாக கூறினார். நீண்டநாள் யோசனைக்குப் பின் ஜெய்ப்பூரில் நான் தலைமைப் பயிற்சியாளராக உள்ள பயிற்சி மையத்தில் கமலேஷை அவர்கள் சேர்த்தனர். அந்த சிறு வயதிலேயே தன்னைவிட பெரியவர்கள் வீசுவதை விட வேகமாக கமலேஷ் பந்துவீசி அசத்துவான். அவனது வேகம் இன்றுவரை தொடர்கிறது” என்கிறார்.

தனது மேற்பார்வையில் வளர்ந்த கமலேஷை முதலில் 14 வயதுக்கு உட்பட்ட ராஜஸ்தான் அணிக்கான தேர்வுக்கு அனுப்பிவைத்தார் ரத்தோர். ஆனால் அப்போது கமலேஷ் தேர்வாகவில்லை. ஆனால் அதற்காக தளரவில்லை. தனது பயிற்சியை தீவிரப்படுத்தினார் கமலேஷ். அடுத்த தேர்வில் அணியில் இடம்பிடித்தவர், பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு சென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த கமலேஷ், 16 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனால் இந்த தொடருக்கு பிறகு அவரது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை போட்டியில் கமலேஷால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் அகாடமியில் பல மாதங்கள் பயிற்சி பெற்று பூரண உடல்நலம் பெற்று, அணிக்குள் நுழைந்துள்ளார் கமலேஷ்.

முதல் போட்டியிலேயே 3 விகெட்களை வீழ்த்தியிருப்பது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. “புதிய பந்துகளில் விக்கெட் எடுப்பதை விட பழைய பந்துகளில் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் விக்கெட் எடுப்பதையே அதிகம் விரும்புகிறேன்” என்று கூறும் கமலேஷ், தன் குருநாதர் ரத்தோருக்கு அடுத்தபடியாக அதிகம் புகழ்வது ராகுல் திராவிட்டைத்தான்.

“19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக உள்ள திராவிட், ஒவ்வொரு விஷயத்திலும் என்னைக் கூர்தீட்டி வருகிறார். அவர் சொற்படி கேட்டாலே போதும் மைதானத்தில் வெற்றி நிச்சயம். அவர் சொன்னபடி செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுத்தருவேன்” என்று உறுதியாக சொல்கிறார் கமலேஷ் நாகர்கோடி.

இந்திய கிரிக்கெட் இவரிடம் நிறைய எதிர்பார்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x