Published : 08 Jan 2018 10:11 AM
Last Updated : 08 Jan 2018 10:11 AM

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் தொடர்:ஸ்ரீரங்கம், ஏவிஎம் ராஜேஸ்வரி அணிகள் வெற்றி

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் நடைபெற்ற 2-ம் கட்ட ஆட்டத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை லே-சேட்லியர் அணியை வீழ்த்தியது.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் இருந்து 72 பள்ளிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று ஜேஎஸ்கே 2-வது சுற்று ஆட்டங்கள் திருநெல்வேலி நகரில் தொடங்கின.

முதல் ஆட்டத்தில் மதுரை லே-சேட்லியர் பள்ளியுடன், திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளி அணி வெற்றி கண்டது.

முதலில் ஆடிய திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் அணி 19.2 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எம். விக்னேஸ்வரன் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் ஆடிய லே-சேட்லியர் அணி 19.5 ஓவர்களில் 78 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி கண்டது. எம். நவீன் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். மற்றொரு போட்டியில் ஏவிஎம் ராஜேஸ்வரி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளி அணியை வென்றது.

முதலில் ஆடிய நீலாம்பாள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. அந்த்சாக் 13 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய ஏவிஎம் ராஜேஸ்வரி அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

மகேஷ் 25 பந்துகளில் 31 ரன்களும், அரவிந்த் 32 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர். பிறிதொரு ஆட்டத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளி அணியை வென்றது.

முதலில் ஆடிய கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 93 ரன்கள் சேர்த்தது. அந்த அணி வீரர் பிரகாஷ் 44 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். பி. நிர்மல்குமார் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணி 7.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அந்த அணி வீரர் டி. அஸ்வத் 23 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். என்.டி. ஹரி சங்கர் 18 பந்துகளில் 51 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x