Published : 22 Sep 2023 09:51 PM
Last Updated : 22 Sep 2023 09:51 PM

IND vs AUS 1st ODI | ருதுராஜ், கில், ராகுல், சூர்யகுமார் அபாரம்: ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா!

சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல்

மொகாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ருதுராஜ் - கில் மற்றும் கே.எல்.ராகுல் - சூர்யகுமார் யாதவ் இடையே அபார கூட்டணி அமைந்திருந்தது அணியின் வெற்றிக்கு உதவியது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் வெள்ளோட்டமாக அமைந்துள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து வலுவான கூட்டணி அமைத்தனர். வார்னர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித், 41 ரன்களில் வெளியேறினார். லபுஷேன் 39 ரன்கள், கேமரூன் கிரீன் 31 ரன்கள், ஸ்டாய்னிஸ் 29 ரன்கள், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்கள், கம்மின்ஸ் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

10 ஓவர்கள் வீசிய ஷமி, 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கிரீன் மற்றும் சாம்பா ரன் அவுட் செய்யப்பட்டனர்.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோகித், கோலி ஆகியோருக்கு இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இன்னிங்ஸை தொடங்கினர். 142 ரன்களுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ், 71 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயஸ் ஐயர், 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கில், 74 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கிஷன், 18 ரன்களில் வெளியேறினார்.

கே.எல்.ராகுல் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி: பின்னர், இணைந்த கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவும் பொறுப்புடன் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் அரைசகம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 63 பந்துகளில் 58 ரன்களை எடுத்திருந்தார். ஜடேஜா, 3 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x