Last Updated : 22 Sep, 2023 08:50 AM

 

Published : 22 Sep 2023 08:50 AM
Last Updated : 22 Sep 2023 08:50 AM

உலகக் கோப்பை நினைவுகள் | 1983-ல் உலக கிரிக்கெட்டை புரட்டிப்போட்ட இந்தியா

உலகக் கோப்பையுடன் அப்போதைய இந்திய அணி வீரர்கள்

1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றுவ ரலாறு படைத்த நாள் அது. நாட்டின் மூலைமுடுக்கு எல்லாம் கிரிக்கெட் பாய்ச்சல் எடுப்பதற்கும், எதிர்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் உத்வேகம் பெறுவதற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கு உண்மையிலேயே அது ஒரு வரலாற்று நாள். மேலும் அந்த தருணம் இந்திய கிரிக்கெட்டையும் உலக கிரிக்கெட்டையும் புரட்டி போட்ட பெரும் திருப்பமாக அமைந்தது.

1975 மற்றும் 1979-ம் ஆண்டு என முதல் இரு உலகக் கோப்பையையும் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து மண்ணில் காலடிவைத்தது. இந்தத் தொடரில் வழக்கம் போன்று 8 அணிகள் பங்கேற்றன. இம்முறை இலங்கை அணி முழு நேர உறுப்பினர் அந்தஸ்துடன் களம் கண்டது. அதேவேளையில் கடந்த முறை விளையாடிய கனடா அணிக்கு பதிலாக ஜிம்பாப்வே அறிமுக அணியாக இடம் பெற்றது.

8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இம்முறை லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதின. இதில் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவில் இருந்தும் தலா இரு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அதில் வெற்றி கண்ட அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

கடந்த இரு தொடர்களிலும் வெளிப்படுத்திய செயல் திறன்களால் ‘வெற்றி வாய்ப்பற்ற அணி’ என்ற முத்திரை இந்தியா மீது விழுந்திருந்தது. இதற்கு முதல் ஆட்டத்திலேயே கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுத்தது. 3-வது முறையாக தொடரை வெல்லும் என கணிக்கப்பட்ட மேற்கு இந்தியத் தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பேட்டிங்கில் யாஷ்பால் சர்மா 89 ரன்களும் பந்து வீச்சில் ரோஜர் பின்னி, ரவி சாஸ்திரி ஆகியோர் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர். போட்டியை வெல்வதற்கு இதுபோன்ற உயர்மட்ட செயல்திறன்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் இந்திய வீரர்களின் மண்ணில் விதைக்கப்பட்டது.

கபில்தேவ் ‘அரக்கன்’: லீக் சுற்றில் 2-வது முறையாக ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட இந்திய அணி 17/5, பின்னர் 78/7 என தர்மசங்கடமான நிலையை எதிர்நோக்கியது. ஆனால் கேப்டன் கபில்தேவ் மாற்றி யோசித்தார். மிகச்சிறந்த எதிர் தாக்குதல் ஆட்டம் தொடுத்து ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து எல்லைகளுக்கும் பறக்கவிட்டார். 6 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் என 138 பந்துகளில், 175 ரன்கள் என பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடி முடித்தார் கபில்தேவ். இதனால் இந்திய அணி 266/8 என இன்னிங்ஸை முடித்தது. இந்த இலக்கு பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வேயை 235 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்வதற்கு போதுமானதாக இருந்தது.

பிபிசி வேலை நிறுத்தம் காரணமாக இந்த போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இதனால் கபில்தேவின் ‘எவர்கிரீன்’ ஆட்டத்தை காட்சிகளாக பார்க்கும் பொன்னான வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு கிடைக்காமல் போனது.

‘சண்டை போட்ட’ மதன் லால்: லீக் சுற்றில் 4 வெற்றி, இரு தோல்விகளுடன் அரை இறுதியில் கால்பதித்த இந்திய அணி அங்கு இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. மறுபுறம் மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியை 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது. அதிகபட்சமே தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சேர்த்த 38 ரன்கள்தான்.

எளிதான இலக்கை துரத்திய மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் அமர்க்களமான தொடக்கம் கொடுத்தார். அனைத்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது கபில்தேவிடம் சென்ற மதன் லால், “பந்தை என்னிடம் கொடுங்கள், விவியன் ரிச்சர்ட்ஸை ஏற்கெனவே நான் ஆட்டமிழக்கச் செய்துள்ளேன். மீண்டும் அதை என்னால் செய்ய முடியும் என வாதிட்டார்”.

கபில்தேவ் ஒரு கணம் யோசித்தார், மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை விட்டு கொடுத்ததை நினைத்து பார்த்தார். வேறு வழி இல்லாமல் மதன் லால் வேண்டுகோளை ஏற்று அவரிடம் பந்தை கொடுத்தார். அதன் பின்னர் நிகழ்ந்தவை வரலாறாக மாறியது. விவியன் ரிச்சர்ட்ஸ் (33), மதன் லால் வீசிய பந்தை தூக்கி அடிக்க கபில்தேவ் ஓடி சென்றபடி கேட்ச் செய்த விதம் வியக்க வைத்தது. அது மேற்கு இந்தியத் தீவுகளின் நம்பிக்கையை சிதைப்பதற்கு முதல்படியாக இருந்தது. அங்கிருந்து சரிவை சந்தித்த அந்த அணி 52 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா முதன் முறையாக உலகக் கோப்பையை கைகளில் ஏந்தி வரலாற்று சாதனையை படைத்தது.

இந்த சாதனைக்கு அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியே காரணம் என்றாலும் அணியை கட்டியெழுப்பிய கபில்தேவுக்கு கூடுதல் பெருமையை வழங்க வேண்டும். அனைவருக்கும் உதாரணமாக திகழ்ந்த தலைமைப் பண்பு,எந்த சூழ்நிலையிலும் மனம் தளராத உறுதி, விட்டுக்கொடுக்காத மனப்பான்மை, ஆட்டத்தின் சூழ்நிலையை கணித்து செயல்பட்ட விதம், பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக பயன்படுத்திய விதம், தேவையான நேரத்தில் மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் அளித்த பங்களிப்பு ஆகியவற்றால் இந்திய அணியின் சாதனைக்கு ஆணி வேர் கபில்தேவ்தான்.

காப்பாற்றிய லதா மங்கேஷ்கர்: வெற்றி பெற்ற இந்திய அணி தாயகம் திரும்பிய பிறகு, வீரர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உணர்ந்தது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், 1983-ம் ஆண்டில் பிசிசிஐ அதிக பண நெருக்கடியில் இருந்தது. இதனால் பிசிசிஐ தலைவர் என்.கே.பி.சால்வே, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரை அணுகினார். இதன் பின்னர் டெல்லியில் லதா மங்கேஷ்கரின் இசை நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்தது. லதா மங்கேஷ்கரின் பெரும் புகழால் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக ரூ.20 லட்சம் திரட்டப்பட்டது. இது கபில்தேவ் குழுவினருக்கு காவியமான உலகக் கோப்பை வெற்றியை இன்னும் இனிமையாக்கியது.

‘பொய்த்து போன மனக்கணக்கு’: 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பெரும்பாலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆரம்பக்கட்டத்தில் லீக் கட்டத்தைத் தாண்டி முன்னேறுவதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. எப்படியும் சீக்கிரம் வெளியேறிவிடுவோம் என்று நினைத்து, அமெரிக்காவில் விடுமுறையை கழிக்க திட்டமிட்டிருந்தனர். மேலும் அங்கு அவர்கள், பல்வேறு நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாட திட்டமிட்டனர். அப்போது புது மாப்பிள்ளையாக இருந்த தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூட தேனிலவுக்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் கபில்தேவின் எழுச்சி அவர், கொடுத்த ஊக்கத்தால் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க தொடங்கியது. இதன் பின்னரே இந்திய அணி வீரர்கள் தங்களது பொழுபோக்கு திட்டங்களையும், அதற்கான பயணத்துக்கான டிக்கெட்களையும் ரத்து செய்தனர். ஸ்ரீகாந்த் தனது டிக்கெட்டுகளை ரத்து செய்ததற்காக வேடிக்கையாக கபில் தேவிடம் பணம் கேட்டதாகவும் தகவல் உண்டு.

பங்கேற்ற அணிகள்

இறுதிப் போட்டி

அதிக ரன்கள், அதிக விக்கெட்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x