Published : 01 Dec 2017 10:16 AM
Last Updated : 01 Dec 2017 10:16 AM

மேற்கிந்திய தீவுகள் - நியூஸிலாந்து அணிகளிடையே முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தற்போது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த 22 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் டெஸ்ட் போட்டியில் வென்றதில்லை. கடைசியாக அந்த அணி 1995-ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில்தான் நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் வென்றுள்ளது. எனவே இந்த டெஸ்ட் போட்டியில் வென்று புதிய சாதனை படைக்கும் முயற்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே அணியை வென்றதும், நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நன்றாக ஆடியதும் அந்த அணியின் உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியைப் பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறும்போது, “கடந்த பல மாதங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். இது எங்கள் ஒற்றுமையை வலுப்படுத்தி உள்ளது. மேலும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் திறமைகளைப் பற்றியும், அவர்களின் பலவீனங்களைப் பற்றியும் மற்ற வீரர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அதற்கேற்ப மைதானத்தில் செயல்படுவோம்” என்றார்.

8 மாதங்களுக்குப் பிறகு

அதே நேரத்தில் நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி இல்லாத நிலையில், இப்போட்டியை சந்திக்கிறது. அவருக்கு பதிலாக மாட் ஹென்ரி ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அணி 8 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது. அதனால் அந்த அணி, டெஸ்ட் போட்டியில் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கிறது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர்களான ஜீத் ராவல், டாம் லாதம் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடியுள்ளது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், “வெலிங்டன் ஆடுகளம் முதல் நாளில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

வெலிங்டன் மைதானத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவு அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x