Published : 29 Dec 2017 03:19 PM
Last Updated : 29 Dec 2017 03:19 PM

இந்தியாவுக்கு எதிராக 4ம் நிலையில் இறங்குவேன் இல்லையேல் குளிர்பானம் ஏந்தி வரத் தயார்: ஏ.பி.டிவில்லியர்ஸ்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றரை நாட்களில் முடிந்தாலும், இந்தியத் தொடருக்கு போதிய தயாரிப்பாக அமைந்தது என்று ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறினார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ் காயத்தினால் ஆடவில்லை, இதனையடுத்து டிவில்லியர்ஸ் கேப்டன் பொறுப்பு வகித்தார். தென் ஆப்பிரிக்க அணியில் தற்போது ‘ஆரோக்கியமான தலைவலி’ வந்துள்ளது, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு 11 வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் யாரை எடுப்பது, யாரை விடுவது என்று தேர்வுக்குழுவினருக்கு ஆரோக்கியமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிவில்லியர்ச் கூறும்போது, “இந்த டெஸ்ட் போட்டியை விளையாடுவதே எங்கள் முன் தயாரிப்பாக இருந்தது. கொஞ்சம் பணிச்சுமை, ஆனால் வீரர்கள் பார்முக்கு வர உதவும். பணிச்சுமை குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இந்த டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மென்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது, அனைத்து பவுலர்களும் பந்து வீசி, விக்கெட்டுகள் கைப்பற்ற முடிந்தது.

டுபிளெசிஸ் காயம் என்று கூறி கேப்டன்சிக்கு என்னை அணுகிய போது லேசாக பயந்தேன். ஆனால் கடைசியில் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றேன். விக்கெட் கீப்பராகவும் செயல்பட வேண்டியிருந்தது, இவையெல்லாம் ஒரே சமயத்தில் நடந்தது மகிழ்ச்சியே. பொறுப்பை எடுத்துக் கொள்வது எனக்கு பிடித்தமானது.

இந்தியாவுக்கு எதிராக ஃபாப் டுபிளெசிஸ் கேப்டன் பொறுப்புக்குத் திரும்புவார். அணித்தேர்வு சிக்கல் உள்ளது. அனைவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். நான் 4-ம் நிலையில் களமிறக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன். அதாவது நான் விளையாடினால் 4-ம் நிலையில் களமிறக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன். இல்லையேல் குளிர்பானம் ஏந்தி வரத்தயார்.

இந்தப் போட்டியில் டி காக் திடீரென காயமடைந்ததால் விக்கெட் கீப்பிங் பொறுப்பேற்றேன், இந்தியத் தொடருக்குள் அவர் நலமாகி விடுவார், அப்படியில்லையெனில் ரிசர்வ் விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்படுவார்.

என்னைப் பொறுத்தவரை நான் கீப்பிங் செய்ய விரும்பவில்லை. என் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். எனவே கீப்பிங் இல்லை. ஆனாலும் இது குறித்து விவாதம் இருக்கும் என்றே கருதுகிறேன்” என்றார் டிவில்லியர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x