Last Updated : 10 Aug, 2023 08:49 AM

 

Published : 10 Aug 2023 08:49 AM
Last Updated : 10 Aug 2023 08:49 AM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

சென்னை: 7-வது ஆசிய ஹாக்கி சாம்பயின்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 16-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானுடன் மோதியது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதியில் கால்பதிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியது.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே சுக்ஜீத் சிங் பந்தை வளையத்துக்குள் கடத்திச் சென்றார். ஆனால் அது பாகிஸ்தான் வீரர்களால் இடைமறிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் பாகிஸ்தான் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. அந்த அணியின் ஹனன் பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார். ஆனால் இது விதிமுறைகளை மீறி அடிக்கப்பட்டதாக இந்திய அணி மேல்முறையீடு செய்தது. இதை ஆய்வு செய்த நடுவர் இந்திய அணியின் கோல்கீப்பர் கிருஷ்ணன் பதக் ஆபத்தான சூழ்நிலையில் பந்தை தடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கோல் மறுக்கப்பட்டது.

எனினும் அந்த அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இலக்கை நோக்கி சூஃப்யான் கான் அடித்த பந்தை கிருஷ்ணன் பதக் தடுத்தார். 13-வது நிமிடத்தில் கார்த்தி செல்வம் இலக்கை நோக்கி அடித்த பந்து பாகிஸ்தான் கோல்கீப்பர் அக்மல் ஹுசைனால் தடுக்கப்பட்டது. 15-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க முதல் கால்பகுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 16-வது நிமிடத்தில் அப்துல் ஹனனின் கோல் அடிக்கும் முயற்சியை நீலகண்டசர்மா தடுத்தார். 21-வது நிமிடத்தில் இந்திய அணியின் கோல்கீப்பர் ஜேஷ் தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து அப்துல் ரஹ்மானின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

23-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதையும் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணி 2-0 என முன்னிலைபெற்றது. இந்திய அணி 24-வது நிமிடத்தில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. கார்த்தி செல்வம் வலது புறத்தில் இருந்து பந்தை சுக்ஜீத் சிங்கிற்கு அனுப்பினார். ஆனால், அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 30-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது கோலாக மாற்றப்படவில்லை. 2-வது கால்பகுதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

36-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை ஜுக்ராஜ் கோலாக மாற்ற இந்திய அணியின் முன்னிலை 3-0 என அதிகரித்தது.

39-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோரது கூட்டணி முயற்சியில் கோல் அடிக்கும் வாய்ப்பு மிக நெருக்கமாக சென்று நழுவியது. 41-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் பீல்டு கோல் அடித்தார். ஆனால் ஹர்மன்பிரீத் சிங்கின் ஷாட் அபாயகரமான வகையில் இருந்ததாக இந்த கோல் மறுக்கப்பட்டது.

43-வது நிமிடத்தில் கார்த்தி செல்வம் இடதுபுறத்தில் அருமையாக ஆகாஷ் தீப் சிங்கிற்கு பந்தை கடத்தி கொடுத்தார். ஆனால் கோல் அடிக்க கிடைத்த எளிதான வாய்ப்பை அவர், வீணடித்தார். 44-வது நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் அர்ஷத் லியாகத் அடித்த பந்தை கிருஷ்ணன் பதக் அருமையாக தடுத்தார்.

48-வது நிமிடத்தில் இந்திய அணி பீல்டு கோல் அடித்தது. ஆனால் பந்து சுக்ஜீத் சிங்கின் கையால் பட்டதாக கூறி இந்த கோலை களடுநடுவர் மறுத்தார். 55-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 4-0 என வலுவான முன்னிலை பெற்றது. கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து லீக் சுற்றை நிறைவு செய்தது. அதேவேளையில் 5 ஆட்டங்களில் 2-வது தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 5 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

முன்னதாக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜப்பான் - சீனா அணிகள் மோதின. இதில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 8-வது நிமிடத்தில் ஷோடயமடாவும், 54-வது நிமிடத்தில் கென்டாரோ ஃபுகுடாவும் கோல் அடித்தனர். சீன அணி தரப்பில் 57-வது நிமிடத்தில் சுவோஸு கோல் அடித்தார். 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியா 0-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. மலேசியாவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது.

லீக் சுற்றின் முடிவில் தென் கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்றிருந்தன. எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படை யில் தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின. அரை இறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் - சீனா அணிகள் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் நாளை (11-ம் தேதி) பிற்பகல் 3.30 மணி அளவில் மோதுகின்றன.

லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில், ஜப்பானுடன் நாளை இரவு 8.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக மாலை 6 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, மலேசியாவை சந்திக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x