Published : 08 Aug 2023 06:44 AM
Last Updated : 08 Aug 2023 06:44 AM

WI vs IND | 3-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன்கள்

கயானா: இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இருஅணிகளும் 5 ஆட்டங்கள் கொண்டடி 20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இரு ஆட்டங்களிலும் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. அந்த அணி டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், கயானாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில், 3-வது ஆட்டம் கயானாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. தொடரில் 0-2 என பின்தங்கிய நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்திருக்க முடியும். தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் திலக் வர்மா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். இஷான் கிஷன், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.

ஆடுகளத்துக்கு தகுந்த அளவில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்ட யுத்திகளை மேற்கொள்ளாதது பின்னடைவாக உள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறுவது நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்குகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும்.

பந்து வீச்சில் சிறிது மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. உடற்சோர்வு காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத குல்தீவ் யாதவ் களமிறங்கக்கூடும். இதனால் ரவி பிஷ்னோய் நீக்கப்படுவார். கடந்த ஆட்டத்தில் அவர், 4 ஓவர்களில் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதேபோன்று அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரும் தனது இடத்தை பறிகொடுக்கக்கூடும். அவருக்கு பதிலாக அவேஷ் கான் அல்லது உம்ரன் மாலிக் வாய்ப்பை பெறக்கூடும்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் ஆதிக்கப் போக்கில் உள்ளது. நிக்கோலஸ் பூரன் சிறந்த பார்மில் உள்ளார். மீண்டும் ஒரு முறை அவர், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x