Published : 20 Nov 2017 07:07 PM
Last Updated : 20 Nov 2017 07:07 PM

கொல்கத்தா டெஸ்ட் கடைசி நாள் ஆட்டத்தில் உணர்ச்சிகளின் மோதல்

கொல்கத்தா டெஸ்ட் போட்டி பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றாலும் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் செல்ல இரு அணி வீரர்களிடையேயும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டன.

விராட் கோலி இலங்கை அணியின் 2-வது இன்னிங்சின் போது அடிக்கடி ரசிகர்கள் அமர்ந்திருந்த காலரியை நோக்கி ‘சத்தம் போதாது, இன்னும் சத்தம் தேவை’ என்ற ரீதியில் செய்கைச் செய்தபடியே இருந்தார். ஆட்டத்தில் உற்சாகத்தைக் கூட்ட அவர் இவ்வாறு செய்கை செய்தார்.

 

காலையில் விராட் கோலி ஒரு அருமையான சதத்தின் மூலம் இலங்கையின் வெற்றியைப் பறித்ததையடுத்து இலங்கை அணி சற்றே ஏமாற்றமடைந்தது, இலங்கை கேப்டன் சந்திமால் ஏமாற்றத்தை பலமுறை வெளிப்படுத்தினார், அதுவும் ஒருமுறை புவனேஷ் குமாருடன் விராட் கோலி விளையாடியபோது கோலிக்கு சிங்கிள் கொடுத்துவிட்டு புவனேஷ் குமார் விக்கெட்டை வீழ்த்துவதுதான் திட்டம், ஆனால் ஓவர் த்ரோவினால் கோலி 2 ரன்களை எடுத்ததோடு, அதே ஓவரில் அதி அற்புதமான நேர் பவுண்டரி ஒன்றையும் அடித்தார், இதனால் சுரங்க லக்மல் மிகவும் வேதனையடைந்தார், சந்திமால் கடுப்பானார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு நடுவர் அவுட் கொடுத்து அதனை ரிவியூ செய்து மட்டையில் பட்டதை நிரூபித்ததும் இலங்கை அணியின் கூடுதல் வெறுப்புக்குக் காரணமானது.

இந்நிலையில் இலங்கை அணி இறங்கி விக்கெட்டுகளை வரிசையாக இழந்து வந்த போது நிரோஷன் டிக்வெல்ல, கேப்டன் சந்திமாலுடன் இணைந்தார். அவர் ஷமியை ஒரு ஹூக் சிக்சும் இன்னொரு டி20 பாணி ஸ்கூப் ஷாட்டில் ஒரு சிக்சரும் அடிக்க ஷமி வெறுப்பானார்.

2வது சிக்ஸ் அடித்த பந்து நோ-பால் என்று நடுவரால் அறிவிக்கப்பட்டது, காரணம் லெக் திசையில் ஸ்கொயராக 3 பீல்டர்களை நிறுத்தியதே. இதனைத் தெரிந்து கொண்டுதான் டிக்வெல்லா 3 ஸ்டம்புகளையும் விட்டு விட்டு வெளியே சென்று ஒரு சுழற்று சுழற்றி சிக்ஸ் அடித்தார். டிக்வெல்லா இதனைச் சுட்டிக்காட்டியதும் இந்திய வீரர்களையும் ஷமி, கோலியையும் வெறுப்பேற்றியது.

இப்படியே உணர்வுகளின் பில்ட்-அப் அடர்த்தியானது. இந்நிலையில்தான் இன்னிங்சின் 19-வது ஓவரை ஷமி வீச முதல் பந்து பவுன்சர், 2வது பந்தை வீச ஷமி ஓடி வர முயன்ற போது டிக்வெல்லா தயாராகவில்லை, இதனால் ஷமி வெறுப்படைந்தார், மேலும் தலையைக் குனிந்தபடியே டிக்வெல்லா ஷமியை பின்னால் செல்லுமாறு கையை அசைத்ததும் கோலி, ஷமியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

இதனையடுத்து பவுலிங் மார்க்கிலிருந்தே ஷமி, டிக்வெல்லாவிடம் சில வார்த்தைகளைப் பிரயோகித்தார், அடுத்த பந்துதான் எட்ஜ் ஆகி ஸ்லிப்புக்கு முன்பாக பிட்ச் ஆகிச் சென்றது, இப்போது ஷமி டிக்வெல்லாவுக்கு மிக நெருக்கமாக அருகில் வந்து சில வார்த்தைகளைக் கூறி கடிந்து கொண்டார்.

அடுத்த பந்து முடிந்தவுடன் கோலி ஸ்லிப்பிலிருந்து வந்து ஓரிரு வார்த்தைகளை உதிர்த்தார். மீண்டும் டிக்வெல்லா ஸ்டம்பிலிருந்து ஒதுங்கி ஆட்டத்தை தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இப்போது கூர்மையான கொல்கத்தா ரசிகர்கள் இணைந்து கூவத் தொடங்கினர். இப்போது நடுவர் டிக்வெல்லா, கோலியை அழைத்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் பிறகு இரு அணிகளும் சமாதானமடைந்தன.

இரு அணிகளும் கடைசி நாளில் உணர்வுடன் ஆடியது ரசிகர்களிடையே ஆரவாரத்தை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x