Published : 08 Nov 2017 06:18 PM
Last Updated : 08 Nov 2017 06:18 PM

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு தோனி வேண்டாம்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆலோசனை

தோனியின் சமீபகால பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்குப் பதிலாக வேறு இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஜித் அகார்கர், விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ள நிலையில் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு அடி மேலே போய், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தோனியை நீக்கி விட்டு புதிய வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கறாராக வாதிட்டுள்ளார்.

தோனியின் பேட்டிங் சரிவு! புள்ளி விவரங்கள் கூறுவதென்ன?

மும்பை ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 42 பந்துகளில் 25 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி அன்று 300 ரன்களுக்கும் மேல் செல்ல முடியாமல் போனது, நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டி20 போட்டியில் கான்பூரில் தோனி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தது நல்ல முயற்சி என்று வாதத்தை தோனி ஆதரவாளர்கள், கோலி உட்பட, முன்வைக்கின்றனர்.

ஆனால் அன்றைய போட்டியில் தோனி எடுத்த 49 ரன்களில் 24 ரன்கள் போட்டி ஏறக்குறைய வெற்றி பெற முடியாத நிலையை எட்டியபிறகு வந்ததே. விவிஎஸ். லஷ்மண் அந்தப் போட்டி குறித்துக் கூறும்போது, “கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 160, தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 80 தான். பெரிய இலக்கைத் துரத்தும் போது இது போதாது” என்றார்.

மட்டையாளர்களுக்கு சாதகமான மட்டைப் பிட்சில் தோனி முதல் 25 பந்துகளில் 9 பந்துகளில் ரன் எதையும் எடுக்கவில்லை. இதில் 6 ரன் இல்லாத பந்துகள் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக. இது ஏதோ ஒருமுறை என்றால் கோலி கூறுவது போல் அவரை மட்டும் இலக்காக்குவது தவறுதான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே தோனி பேட்டிங்கில் கடைசியில் பெரிய ஷாட்களை ஆடத் திணறி வருவதுதான் எதார்த்த நிலை என்று கிரிக் இன்போ இணையதளத்தின் உதவி ஆசிரியர் சித்தார்த் மோங்கா கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

அவர் மேலும் அந்தக் கட்டுரையில், 2016 தொடக்கம் முதலே, அனைத்து டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் கடைசி 10 ஓவர்களில் ஸ்பின் பந்து வீச்சில் ஓவருக்கு 6.87 ரன்கள் என்ற விகிதத்தில்தான் தோனி ஸ்கோர் செய்து வருகிறார். அவர் இந்தக் காலக்கட்டத்தில் எதிர்கொண்ட 46% ஸ்பின் பந்து வீச்சில் பெரிய அளவில் தோனியால் ரன்கள் எடுக்க முடியவில்லை. ஜனவரி 2016 முதலே ஒவ்வொரு 10 பந்துக்கும் ஒரு பவுண்டரி என்று கூட தோனியினால் ஸ்கோர் செய்ய முடியவில்லை என்று சித்தார்த் மோங்கா குறிப்பிடுகிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் கூட தோனியின் சமீபத்திய பாராட்டுக்குரிய இன்னிங்ஸ் எல்லாம் குறைந்த ரன் இலக்கு போட்டிகளில்தான், அதிலும் ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளின் குறைந்த இலக்குக்கு எதிராக வெற்றி பெற முடியவில்லை. ஃபிளாட் பிட்ச்களில் கூட ஸ்கோரிங் ரேட்டுக்கு தகுந்தவாறு தோனி ஆடமுடியாமல் உள்ளது என்று மோங்கா குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் ஐபிடைம்ஸ் இணையதளத்தில் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:

இந்தியா, நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான தொடர் வருகிறது. இலங்கை அணி வலுவிழந்த நிலையில் இருப்பதால் வேறு வீரர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர் உள்ளது, டாப் அணிகளுக்கு எதிராக சில டி20 போட்டிகள் உள்ளது அப்போது வாய்ப்பளித்த வீரர்களின் செயல்திறன் பற்றி மதிப்பிடலாம்.

இலங்கைக்கு எதிரான தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க சரியான தருணம் ஏற்பட்டுள்ளது. தோனி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திணறி வருகிறார். அவரது பேட்டிங் குறுகிப்போய் விட்டது. எனவே புதிய வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரம் கனிந்திருப்பதாகவே கருதுகிறேன்.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x