Published : 07 Nov 2017 10:08 AM
Last Updated : 07 Nov 2017 10:08 AM

டென்னிஸ் தரவரிசையில் திவிஜ் சரண் முன்னேற்றம்: இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு பின்னடைவு

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் திவிஜ் சரண் முன்னேற்றம் கண்டுள்ளார். அதேவேளையில் சானியா மிர்சா பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடி வரும் திவிஜ் சரண், கடைசியாக பங்கேற்ற 3 தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் ஐரோப்பிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார். இதனால் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி முதன்முறையாக 50-வது இடத்தை பிடித்துள்ளார். 31 வயதான டெல்லியைச் சேர்ந்த திவிஜ் சரண் தனது நீண்ட கால ஜோடியான பூரவ் ராஜாவை இந்த சீசனின் தொடக்கத்தில் பிரிந்தார்.

எனினும் வெவ்வேறு ஜோடியுடன் இணைந்து விளையாடிய போதிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் திவிஜ் சரண். மற்றொரு இரட்டையர் பிரிவு வீரரான ரோகன் போபண்ணா 15-வது இடத்தில் உள்ளார். இவர்களை தவிர பூரவ் ராஜா 62-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 70-வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழியன் 97-வது இடத்திலும் உள்ளனர்.

ஐடிஎப் தொடரில் 19 முறையும், சாலஞ்சர் போட்டியில் 13 பட்டங்களும், ஏடிபி தொடர்களில் 3 முறையும் வெற்றி கண்டுள்ள திவிஜ் சரண், “தன்னால் நிச்சயம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்றும் அடுத்ததாக 30 இடங்களுக்குள் வருவதே இலக்கு” என்றும் தெரிவித்தார்.

ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 140-வது இடத்திலும், ராம் குமார் ராமநாதன் 148-வது இடத்திலும், குணேஷ்வரன் 255-வது இடத்திலும், சுமித் நாகல் 331-வது இடத்திலும் பாலாஜி 350-வது இடத்திலும் உள்ளனர். அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 281-வது இடத்திலும், கர்மான் கவுர் தாண்டி 307-வது இடத்திலும், பிரஞ்ஜலா 483-வது இடமும் வகிக்கின்றனர்.

இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 3 இடங்களை இழந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2016-ல் ஆண்டு முழுவதும் முதலிடத்தில் இருந்த சானியா, இந்த சீசனின் தொடக்கத்திலும் முதலிடம் வகித்தார். ஆனால் அதன் பின்னர் சரிவுகளை சந்தித்தார். இம்முறை டபிள்யூடிஏ தொடருக்கும் சானியா தகுதி பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x