Published : 14 Nov 2017 05:26 PM
Last Updated : 14 Nov 2017 05:26 PM

என் வாழ்நாளில் இவ்வளவு போட்டிகளில் ஆடியதில்லை, ஓய்வு கேட்டேன்: ஹர்திக் பாண்டியா

இலங்கைக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பணிச்சுமை காரணமாக தான் ஓய்வு கேட்டதாக தெரிவித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

நியூஸ் 18 சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் தான் ஓய்வு வேண்டும் என்று கேட்டேன். என் உடல்நிலை சரியாக இல்லை. முழு உடற்தகுதியுடன் இருக்கும் போதுதான் 100% பங்களிப்பு செய்ய முடியும். ஆனால் 100% பங்களிப்பு செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கொன்றும் அங்கொன்றுமாக காயங்கள் ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் நான் விளையாடிய கிரிக்கெட்டின் அளவு அப்படிப்பட்டது.

நான் 30 ஒருநாள் போட்டிகள், 25 டி20 போட்டிகள் 3 டெஸ்ட் போட்டிகள் என்று இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆடியுள்ளேன். ஆல்ரவுண்டராக இது கடினம், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எனது பணிச்சுமையை நான் நிர்வகிக்க வேண்டியுள்ளது. பணிச்சுமை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம், ஏனெனில் நான் என் வாழ்நாளில் இவ்வளவு கிரிக்கெட் ஆடியதில்லை.

இந்த ஓய்வு கிடைத்தது அதிர்ஷ்டமே. இதன் மூலம் நான் மீண்டும் முழு உடற்தகுதி பெற பயிற்சி செய்வேன். தென் ஆப்பிரிக்கா தொடர் என் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்தத் தொடருக்குள் அதி உடல் தகுதி பெற்று மீண்டும் வலுவாகத் திரும்புவேன்.

அயல்நாட்டு தொடர்கள் பற்றி பேசிக்கொண்டேயிருக்கின்றனர், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்கள் என்று பேசிக்கொண்டேயிருக்கின்றனர். எனக்கு இத்தகைய சவால்கள் பிடிக்கும். இதுதான் என்னை தொடர்ந்து செயலாற்ற வைத்துக் கொண்டிருக்கிறது. நான் வித்தியாசத்தை ஏற்படுத்துபவன், பார்ப்போம். தென் ஆப்பிரிக்காவில் ஆடியதில்லை. நிச்சயம் நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x