Published : 03 Nov 2017 04:57 PM
Last Updated : 03 Nov 2017 04:57 PM

48.4 ஓவர்கள் விளையாடி ஜிம்பாப்வேயை தோல்வியிலிருந்து காப்பாற்றிய சகாப்வா, கிரீமர்

புலாவாயோவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை தோல்வியிலிருந்து சகாப்வா, கிரீமர் ஆகியோர் மீட்க, மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றியது.

ஹோல்டர் தலைமையில் மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. ஆனால் ஜிம்பாப்வே அணி கடும் சவால் அளித்தது என்பதே உண்மை. இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணி தனது திறமைகளுக்கு மீறி ஆடி சவால் அளித்தது.

முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி மசகாட்சாவின் அற்புதமான சதத்துடன் (147), சிகந்தர் ரசாவின் 80 ரன்களுடன், 326 ரன்களை எடுத்தது. மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 230/7 என்ற நிலையிலிருந்து விக்கெட் கீப்பர் டவ்ரிச் 103 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 110 ரன்களையும் எடுக்க 448 ரன்கள் குவித்தது.

122 ரன்கள் முன்னிலை பெற்ற மே.இ.தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வேவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. கிமார் ரோச், பிஷூ, கேப்ரியல் அபாரமாக வீச 46/4 என்று தோல்வி அச்சுறுத்தலில் இருந்தது, அப்போது பி.ஜே மூர் (42), சிகந்தர் ரஸா (89) இணைந்து 98 ரன்களைச் சேர்த்தனர் என்பதோடு 46 ஓவர்களை கடும் நெருக்கடியில் ஆடினர். மூரை, கேப்ரியல் வீழ்த்த, வாலரை பிஷூ பெவிலியன் அனுப்ப, சிகந்தர் ரசாவை ஹோல்டர் பவுல்டு செய்தார், இதனையடுத்து 201/7 என்று ஜிம்பாப்வே தோல்வியின் பிடியில் இருந்தது, காரணம் மே.இ.தீவுகள் அப்போட்யு 220 ரன்களுக்கு ஜிம்பாப்வேயை சுருட்டியிருந்தால் மீதமுள்ள குறைந்த இலக்கை விரட்டி 2-0 என்று வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால் அப்போதுதான் ரெஜிஸ் சகாப்வா (71 நாட் அவுட்), கேப்டன் கிரீமர் (28 நாட் அவுட்) இணைந்து 48.4 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடத்தை டிரா செய்தனர்.

கேப்டன் கிரீமர் பொறுப்புடன் ஆடி தன் 28 ரன்களுக்கு 150 பந்துகள் ஆடி மே.இ.தீவுகளை வெறுப்பேற்றினார். சகாப்வா தன் 71 ரன்களுக்கு 192 பந்துகளைச் சந்தித்தார்.

முதல் இன்னிங்சிலும் 80 ரன்கள் எடுத்த சிகந்தர் ரஸா, இரண்டாவது இன்னிங்சிலும் 89 ரன்கள் எடுத்ததோடு பவுலிங்கிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால், ஜாக் காலிசுக்குப் பிறகு ஒரு டெஸ்டில் இரண்டு 80 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஆல்ரவுண்டர் ஆனார். இதற்காக ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். 13 விக்கெட்டுகள் வீழ்த்திய தேவேந்திர பிஷூ தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சகாப்வா நிறைய பந்துகளில் பீட் ஆனாலும் தடுப்பாட்டத்தில் சுவராக நின்றார், அதே வேளையில் மோசமான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். சிகந்தர் ரசாவிம் தைரியமாக ஆடினார் 203 பந்துகளை ஆடியதும் டிராவுக்கு பலம் சேர்த்தது. கடைசியில் ஹோல்டர் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். மே.இ.தீவுகள் தனது ரிவியூவை வீண் செய்ததால், க்ரீமர் எட்ஜ் செய்ததை கேட்ச் பிடித்தும் நடுவர் நாட் அவுட் என்றதால் ரிவியூ செய்ய முடியாமல் போனது. பிறகு இதே கிரீமருக்கு இருமுறை ராஸ்டன் சேஸ் பந்தில் எல்.பி.முறையீடு எழுந்து ரீப்ளேயில் அவுட் என்று தெரிந்தும் நடுவர் நாட் அவுட் தீர்ப்பை ரிவியூ செய்ய முடியாமல் போனது.

இருப்பினும் மன உறுதியுடன் ஆடி ஜிம்பாப்வே ஒரு டெஸ்ட் தோல்வியை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x