Published : 25 Jun 2023 05:09 AM
Last Updated : 25 Jun 2023 05:09 AM
மும்பை: சேதேஷ்வர் புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை 12-ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டது. இந்த பட்டியலில் சேதேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட்தொடரில் விளையாடும் இந்திய அணியின் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள், கேள்விகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சேதேஷ்வர் புஜாராவுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் அஜிங்க்ய ரஹானேவைத் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை.
அணி வீரர்கள் அனைவரும் மோசமாக விளையாடிய நிலையில், சேதேஷ்வர் புஜாராவை மட்டும் பலிகடா ஆக்குவது ஏன்? இந்திய கிரிக்கெட்டின் சுயநலமற்ற சேவகனாக அவர் திகழ்ந்து வருகிறார். இந்திய அணிக்காக பல சாதனைகளை அவர் செய்திருக்கிறார். அவருக்கு அதிக அளவில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இல்லை என்பதாலும் அவரை நீக்கினால் எந்த சர்ச்சையும் எழாது என்பதாலும் இவ்வாறு தேர்வுக் குழுவினர் செய்தார்களா?
தேர்வுக் குழுவினர் எதன் அடிப்படையில் அணியை தேர்வு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் தேர்வாவதற்கு சர்பராஸ்கான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? அவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ அவரிடம் கூற வேண்டும் அல்லது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை சர்பராஸ் கான் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT