Last Updated : 04 Oct, 2017 10:20 AM

 

Published : 04 Oct 2017 10:20 AM
Last Updated : 04 Oct 2017 10:20 AM

பிபா யு 17 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தாலும் வெற்றிகளை குவிப்பதில் தடை இருக்கக்கூடாது; இளம் இந்திய அணிக்கு அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவுரை

பிபா யு 17 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றாலும் எதிரணியை வீழ்த்துவதில் தடை இருக்கக்கூடாது என இளம் இந்திய கால்பந்து அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார்.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அமர்ஜித் சிங் தலைமையில் களமிறங்குகிறது. இதே பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கானா அணிகளும் உள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 6-ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. இதையடுத்து கொலம்பியாவுடன் 9-ம் தேதியும், கானாவுடன் 12-ம் தேதியும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்நிலையில் பிபா உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பேசியதாவது:

17 வயதுக்குட்பட்ட வீரர்களான நீங்கள், களத்தில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் இந்த தேசத்தை ஊக்குவிக்க முடியும். நீங்கள் தற்போது விளையாடுவது எப்போதும் நினைவில் இருக்கும்.

இந்தத் தொடரை நடத்துவதால் நீங்கள் நேரடியாக விளையாட தகுதி பெற்றிருக்கலாம், ஆனால் எதிரணியை வீழ்த்தி ஆச்சர்யம் அளிப்பதில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கையின் கடைசி ஆட்டமாக ஒவ்வொரு போட்டியையும் விளையாட வேண்டும், ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. ஒவ்வொரு தருணங்களும் கணக்கிடப்படுகிறது. களத்தில் இறங்கிவிட்டால் ஆக்ரோஷமாக வெற்றி பெறும் முனைப்புடன் விளையாட வேண்டும்.

நீங்கள் களத்தில் இறங்கும் போது, கடந்த காலங்களில் மக்கள் உங்களைப் பற்றி கூறிய அபத்தமான விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து வலிகளால் பாதிக்கப்பட்டாலும், நீங்கள் எடுத்த முயற்சியால் தான் தற்போது இங்கு விளையாடும் நிலைமைக்கு வந்துள்ளீர்கள்.

கால்பந்தும் உங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி உள்ளது. நீங்கள் மணிப்பூர், பெங்கால், கோவா அணிகளுக்காக விளையாடவில்லை. இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். இந்த பிபா யு-17 உலகக் கோப்பையில் நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பேசினார். -

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x