Published : 09 Oct 2017 04:19 PM
Last Updated : 09 Oct 2017 04:19 PM

நான் அவசரப்படவில்லை; ஒருநாள் போட்டி அணியில் வாய்ப்பு தேடி வரும்: அஸ்வின் நம்பிக்கை

2015 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்தியா ஆடிய 47 ஒருநாள் போட்டிகளில் 15 போட்டிகளில் மட்டுமே ஆடிய அஸ்வின், ஒருநாள் போட்டி அணிக்குத் திரும்புவதற்காகத் தான் அவசரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மணிக்கட்டில் பந்தைத் திருப்பி அசத்தி வரும் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரது திறமைகள் அபாரமாக வெளிப்பட அஸ்வின், ஜடேஜா ஆகியோரது 2019 உலகக்கோப்பை வாய்ப்பு பெரிதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் அஸ்வின் தன் ஒருநாள் போட்டி வாய்ப்புகள் பற்றி கூறியிருப்பதாவது:

நான் அவசரப்படவில்லை. ஒருநாள் என் வீடு தேடி ஒருநாள் போட்டிகளுக்கான வாய்ப்பு வரும், ஏனெனில் நான் பெரிதாக எந்தத் தவறும் செய்துவிடவில்லை. எனவே எனக்கு வாய்ப்புக் கொடுக்கும் போது, ஒரு சூழ்நிலையில் என்னைப் புகுத்தும் போது நான் என் திறமைக்கேற்ப என் ஆட்டத்தை உயர்த்திக் கொள்வேன்.

(உடற்தகுதி பற்றி) நான் அமைப்பின் செயல்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவனே. அந்த அமைப்புக்கு இணையாக என்னை வளர்த்தெடுத்துக் கொள்ள முயற்சி செய்வேன்.

அணியை எப்படி வளர்த்தெடுப்பது என்பது பற்றி ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். இப்போதைய தலைமையின் பார்வை உடற்தகுதி நிலை என்றால் அதனை மதிப்பது முக்கியம்.

ஐபிஎல் போட்டிகளில் ஆட முடியாமல் போன பிறகே நான் உடற்தகுதிக்கான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். வெறியுடன் பயிற்சியில் ஈடுபட்டேன். யோ-யோ டெஸ்ட் எடுத்து எப்படி அனைத்தும் செல்கிறது என்பதை அறுதியிட வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை நன்றாக வீச வேண்டும், முதல்தரமான ஒத்திசைவை அடைய வேண்டும் என்பதே. நான் வெளிநாடுகளில் ஆக்ரோஷமான, தாக்குதல் பவுலராக இருந்ததில்லை ஆனால் ரன்களைக் கொடுக்காமல் சிக்கனமாக வைத்துக் கொள்ள வேண்டியத் தேவை உள்ளது.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x