Published : 19 Jun 2023 08:17 AM
Last Updated : 19 Jun 2023 08:17 AM
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை 252 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் அவரது, சொத்து மதிப்பு குறித்து ‘ஸ்டாக் குரோ' என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி விராட் கோலி சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.1,050 கோடியாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமானம் ஈட்டுபவராக உள்ளார் விராட் கோலி.
34 வயதான விராட் கோலிக்கு பல்வேறு வழிகளில் வருமானம் கிடைக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் விராட் கோலி ‘ஏ பிளஸ்’ பிரிவில் உள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் கிடைக்கும். இதுதவிர ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டி ஒன்றுக்கு ரூ.6 லட்சமும், டி 20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் வருமானம் கிடைக்கிறது. மேலும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடனான ஐபிஎல் ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.15 கோடி சம்பாதிக்கிறார்.
இதை தவிர்த்து பல பிராண்டுகளை வைத்திருக்கும் விராட் கோலி, 7 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதில் ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ நிறுவனங்களும் அடங்கும். கோலி 18 -க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு விளம்பர தூதராக உள்ளார். ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக ஆண்டுக்கு ரூ.7.50 முதல் 10 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். இந்த வகையில் ரூ.175 கோடி சம்பாதிக்கிறார் விராட் கோலி. விளம்பரங்களின் வாயிலாக பாலிவுட் மற்றும் விளையாட்டு துறையில் ஒரு தனிநபரால் ஈட்டப்படும் அதிக தொகை இதுவாகும்.
இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், ட்விட்டரில் ஒரு பதிவுக்கு ரூ.2.5 கோடியும் வருமானம் பெறுகிறார் கோலி. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள ஒரு வீடும், ஹரியாணா மாநிலம் குருகிராமில் ரூ.80 கோடி மதிப்புள்ள வீடும் சொந்தமாக வைத்துள்ள விராட் கோலியிடம், ரூ.31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் உள்ளன. இவைதவிர, இந்தியன் சூப்பர் லீக்கில் (ஐஎஸ்எல்) போட்டியிடும் எஃப்சி கோவா கால்பந்து கிளப், டென்னிஸ் அணி மற்றும் புரோ-மல்யுத்த அணியும் கோலிக்கு சொந்தமாக உள்ளது.தி இந்து தி தி இந்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT