Published : 09 Oct 2017 05:32 PM
Last Updated : 09 Oct 2017 05:32 PM

தோனி சிறந்த வீரராக உருவெடுக்க சவுரவ் கங்குலி தியாகம் செய்தார்: சேவாக் பேட்டி

சவுரவ் கங்குலி தன் பேட்டிங் நிலையை தோனிக்கு விட்டுக் கொடுத்து தியாகம் செய்ததால் தோனி மிகச்சிறந்த வீரராக இன்று உருவெடுத்துள்ளார் என்று அதிரடி வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

கங்குலி கேப்டன்சியில்தான் சேவாக் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார், அணியில் இர்பான் பத்தான், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், மொகமத் கயீஃப், யுவராஜ் சிங், தோனி என்று பிரமாதமான வீரர்கள் படையெடுத்தனர்.

இந்தியா டிவி நேர்காணலில் விரேந்திர சேவாக் இது பற்றிக் கூறும்போது,

“அப்போது பேட்டிங் ஆர்டரில் சில பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டோம், அதாவது தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினால் 3-ம் நிலையில் கங்குலி இறங்குவதாகவும் அப்படி தொடக்கம் சரியில்லை எனில் ரன் விகிதத்தை அதிகரிக்க ‘பிஞ்ச் ஹிட்டர்’களான இர்பான் பத்தான், தோனி ஆகியோரை களமிறக்க முடிவெடுக்கப்பட்டது.

அந்தத் தருணத்தில்தான் கங்குலி 3-ம் நிலையில் தோனியை களமிறக்கினார். 3 அல்லது 4 போட்டிகளுக்கு அப்படி வாய்ப்பளித்தார். ஒரு சில கேப்டன்களே தன்னுடைய இடத்தை சேவாகிற்கும், பிறகு தோனிக்கும் விட்டுக் கொடுக்க முடியும், அதில் கங்குலி ஒருவர். தாதா (கங்குலி) இதனைச் செய்யவில்லையெனில் தோனி இன்று இவ்வளவு பெரிய வீரராக உருவெடுத்திருக்க முடியாது.

அதே போல் ராகுல் திராவிட் கேப்டன்சியில் தோனிக்கு பினிஷர் ரோல் அளிக்கப்பட்டது. அவர் அப்போது மோசமான ஷாட் தேர்வினால் இருமுறை விரைவில் ஆட்டமிழந்த போது திராவிட் அவரை எச்சரித்தார். ஆனால் அதிலிருந்து தோனி தன்னுடைய ஆட்ட அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொண்டார், சிறந்த பினிஷர் ஆனார். யுவராஜ் சிங்குடன் தோனி இணைந்து ஆடிய இன்னிங்ஸ்களை மறக்க முடியுமா?

இவ்வாறு கூறினார் சேவாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x