Published : 04 Oct 2017 10:23 AM
Last Updated : 04 Oct 2017 10:23 AM

2-0 என வென்றது இந்தியா ஏ அணி

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக இந்தியா ஏ அணி வென்றது.

இரு அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி விஜயவாடாவில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து ஏ அணி 69.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ 65, ராவல் 48, செய்பெர்ட் 44 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் கரண் சர்மா, ஷர்துல் தாக்குர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து விளையாடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 110 ஓவர்களில் 447 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாவ்னே 162, ஸ்ரேயஸ் ஐயர் 82, பார்த்தீவ் படேல் 65 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து ஏ அணி தரப்பில் இஸ் சோதி 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 236 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 79.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேப்டன் ஹென்றி நிக்கோல்ஸ் 94, ராவல் 47 ரன்கள் எடுத்தனர். 3-வது நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் என்று வலுவான நிலையில் இருந்த நியூஸிலாந்து ஏ அணி அதன் பின்னர் 106 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் தாரை வார்த்தது. இந்திய அணி தரப்பில் கரண் சர்மா 5, ஷபாஸ் நதீம் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. முதல் டெஸ்ட்டில் இந்தியா ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x