Published : 10 Oct 2017 06:55 AM
Last Updated : 10 Oct 2017 06:55 AM

யு 17 உலகக்கோப்பையில் இந்தியா மீண்டும் ஏமாற்றம்: 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி

பிபா யு 17 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் 3-0 தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் நேற்று கொலம்பியாவுடன் மோதியது. டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 16-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஜித் அற்புதமாக இலக்கை நோக்கி பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்றார். ஆனால் கோல்கீப்பர் தனது இடத்தை விட்டு முன்னால் வந்து பந்தை தடுத்தார். இது கோல் அடிக்க கிடைத்த மிக நெருக்கமான வாய்ப்பாக அமைந்தது.

18-வது நிமிடத்தில் கொலம்பியா அணிக்கு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கொலம்பிய வீரர் மெனிசஸ் இலக்கை நோக்கி துல்லியமாக பந்தை உதைத்தார். ஆனால் இந்திய கோல்கீப்பர் தீரஜ் அசத்தலாக பாய்ந்து சென்று கோல் விழாமல் தடுத்து நிறுத்தினார். தீரஜ் தனது அசாத்தியமான திறனால் மேலும் இருமுறை எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியை தகர்த்தெறிந்தார். கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக கொலம்பியா வீரர் லியாண்ட்ரோ காம்பஸ், தலையால் முட்டி கோல் அடிக்கும் முயற்சியை மின்னல் வேகத்தில் தடுத்தார் தீரஜ்.

45-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய வீரர் ராகுல், இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் விளிம்பில் பட்டு நழுவிச் சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 2-வது பாதியில் கொலம்பியா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். 49-வது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் ஜூவான் பெனாலோசா, இந்திய தடுப்பாட்ட வீரரை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

82-வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. கார்னரில் இருந்து பந்தை பெற்ற இந்திய வீரர் ஜீக்சன் தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. ஆனால் இந்திய அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. இந்திய அணியின் பலவீமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி அடுத்த நிமிடத்திலேயே ஜூவான் பெனாலோசா 2-வது கோலை அடித்தார்.

இதனால் கொலம்பியா 2-1 என முன்னிலை வகித்தது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் இந்திய அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா, கானாவிடம் தோல்வி கண்டிருந்தது.

நவி மும்பையில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பராகுவேயிடம் தோல்வி கண்டிருந்தது. மாலி அணித் தரப்பில் டிஜெமோசா, லசானா, கோனேட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான கானா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது அமெரிக்கா. அந்த அணித் தரப்பில் 75-வது நிமிடத்தில் அகினோலா கோல் அடித்தார். அமெரிக்கா முதல் ஆட்டத்தில் இந்தியாவை வென்றிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x